ரெய்டு பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது - துரைமுருகன்
சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் நிலையில், ரெய்டு போன்ற பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக பயப்படாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேட்டி அளித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை - மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வருமானவரித்துறை சோதனைக்கு திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வேலூரில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், “ரெய்டு போன்ற பூச்சாண்டி எல்லாம் திமுக பயப்படாது. ரெய்டுக்கு எல்லாம் பயந்து இருந்தால், என்றைக்கோ திமுக செத்துப்போய் புல் முளைத்திருக்கும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரிசோதனை நடத்துகின்றனர். இதுபோன்ற செயல்களில் மத்திய அரசு ஈடுபடுவது ஜனநாயகமல்ல. கண்துடைப்புக்காக அதிமுகவினரின் இடங்களில் ரெய்டு நடத்திவிட்டு, தற்போது, திமுக பயமுறுத்தவே ரெய்டு நடத்துகின்றனர்” என்று கூறினார்.