DMK Seniors : “மூத்தவர்களுக்கு கல்தா ; இளைஞர்களுக்கு வாய்ப்பு” கலக்கத்தில் திமுக சீனியர்கள்..!
”சீனியர்களுக்கு எம்.எல்.ஏ சீட் கொடுப்பதற்கு பதிலாக, மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்”

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக-வில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. குறிப்பாக, வழக்கமாக எம்.எல்.ஏ சீட் பெறும் சீனியர்களுக்கு பதில் அந்த தொகுதியில் துடிப்பாக செயல்படும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
”சீனியர்கள் வழிவிட வேண்டும்” – சொன்ன உதயநிதி ஸ்டாலின்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த், பள்ளிக் கூடம் பாஸ் ஆகியும் அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல் இன்னும் ஒரே வகுப்பிலேயே சிலர் உட்கார்ந்திருப்பதாக திமுகவின் மூத்த நிர்வாகிகளை கிண்டல் செய்யும் விதமாக பேசினார். அதனை ஆமோதிக்கும் வகையில் அடுத்த நாள் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் ‘சீனியர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும்” என்ற வகையில் பேசினார். இது திமுகவிற்குள் இருக்கும் சீனியர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இப்போதே சீனியர்களூக்கு சீட் இல்லை என்பதை உணர்த்துவிதமாக இந்த நடவடிக்கை இருப்பதாக அவர்கள் பேசி வந்தனர்.
ஒதுங்கிய துரைமுருகன், பொன்முடி?
இந்நிலையில், திமுக பொதுச்செயலாளரும் அந்த கட்சியின் சீனியருமான துரைமுருகன் வேலூரில் நடைபெற்ற திமுக உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, நிறைய இளைஞர்கள் திமுக நோக்கி வருகிறார்கள். அவர்கள்தான் திமுகவின் பலம். அவர்களுக்கு வழி விட வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேச்சை ஆமோதிக்கும் வகையில் பேசினார். மூத்த நிர்வாகியான துரைமுருகனே இப்படி பேசியது, திமுக சீனியர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. அதே நேரத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கே சீட் கிடைக்குமா? என்று தெரியவில்லை என்று இன்னொரு மூத்த நிர்வாகியும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான பொன்முடி பேசியதும் 2026 தேர்தலிலும் சீட் கிடைக்கும் என நம்பியிருக்கும் சீனியர்களுக்கு பயத்தை அதிகப்படுத்தியது.
ஸ்டாலினிடம் முறையிட்ட உதயநிதி
இப்படியான சூழ்நிலையில், இளைஞர்களை ஈர்க்கும் விதமாக விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது, சீமானின் நாம் தமிழர் கட்சியிலும் இளைஞர்கள் அதிகமாக இருப்பது உள்ளிட்டவற்றையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மீண்டும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றால், கட்சிக்காக உழைத்து வரும் துடிப்பாக இளைஞர்களுக்கு திமுக சார்பாக போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டு வருவதாக குறிஞ்சி இல்லத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புள்ளி விவரங்களோடு உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அப்படி கொடுத்தால்தான், இளைஞர்களுக்கு திமுக முக்கியத்துவம் தருகிறது என்பதை களத்தில் திமுகவிற்காக உழைக்கும் இளைஞர்கள் உணருவார்கள் என்று குறிப்பிட்டு பேசியதாக கூறப்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு என்ன ?
இளைஞரணியை உருவாக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தருவதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், 2026ல் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும் சில கடினமான, அதே வேளையில் முக்கியத்துவம் வாய்ந்த சில முக்கிய முடிவுகளை விரைவில் எடுக்கவுள்ளார் என்று செனடாப் சாலை வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.
வாரிசுகளுக்கு சீட் ; சீனியர்கள் நோ
சீனியர்களுக்கு சீட் இல்லையென்றாலும் கூட கட்சிக்காக உழைக்கும் அவரது வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும், வயதான சீனியர்களுக்கு எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுப்பதற்கு பதில், மீண்டும் ஆட்சி அமைந்தப் பிறகு அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வாரியத் தலைவர் பதவி உள்ளிட்ட பொறுப்புகளை கொடுத்து அவர்களை சமாதானம் செய்யலாம் என்றும் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

