CM Stalin : "குறைகள், அலட்சியம் கூடாது..! மக்களிடம் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்..!" அமைச்சர்களுக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
எந்த காராணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியம் வேண்டாம் என அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சொல்லிலும் செயலிலும் அலட்சியம் வேண்டாம் என அமைச்சர்கள் மற்றும் கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
"நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கிறார். அதனைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதுடன், ‘சொல்லாததையும் செய்வோம்.. சொல்லாமலும் செய்வோம்’ எனப் புதிய புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறோம்.
"கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது"
தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது.
”மீண்டும் நினைவூட்டுகிறேன்”:
அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கனவே செப்டம்பர் 26-ஆம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள். மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
”கடுமையான நடவடிக்கை”
நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால், மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குத் தடங்கலாகும் சூழலைத் திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணிக் குரலாகச் செயல்பட நினைப்போரும் காத்திருக்கிறார்கள். நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி - ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். அவர்களின் கற்பனையிலும் கனவிலும்தான் புழுதிமண் விழும்; விழ வேண்டும். அதற்கேற்ப உங்களின் சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும்.
தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் முத்தமிழறிஞர் கலைஞரும் நமக்கு ஊட்டியுள்ள திராவிட உணர்வுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்திட, தமிழர்களின் வாழ்வு செழித்திட, செம்மொழித் தமிழ் செம்மாந்து திகழ்ந்திட, கழகமும் கழக அரசும் தொடர்ந்து பாடுபடும். அதற்கான ஊக்கத்தைப் பெற்றிடும் வகையில் கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் நாள் ஞாயிறு அன்று கூடுகிறது.
ஞாயிறு என்றாலே சூரியன்தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உயிரனைய உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம். ஒரு தாய் மக்களாய் - ஒரு கொள்கைக் குடும்பத்துச் சொந்த பந்தங்களாய் - பொதுக்குழுவில் நாம் காண்போம் ! தமிழ்ப் பொதுமக்கள் நலன் தவறாது காப்போம் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் அறிவுறுத்தல்:
சமீபகாலங்களாக திமுக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் இலவச டிக்கெட் மற்றும் தனியார் பேருந்து கட்டணம் குறித்து பேசியது, சமூக வலைதளங்களில் பெரிதும் வைராலானது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், கட்சியினருக்கு அறிவுறுத்தல் கடிதம் வழங்கியுள்ளார்.