Ponmudi Upset: பறிபோன பதவி.. சொந்த கோட்டையிலேயே டம்மியான பொன்முடி.. கைமாறும் விழுப்புரம்.?
கட்சிப் பதவி, அரசுப் பதவி என வரிசையாக எல்லாவற்றையும் இழந்த பொன்முடி, விழுப்புரத்தில் தனது செல்வாக்கையும் இழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகனோடு சேர்த்து அவரும் டம்மியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சராக முதலில் உயர்கல்வித்துறையை இழந்த பொன்முடி, அடுத்ததாக மாவட்ட பொறுப்பு, துணை பொதுச்செயலாளர் பதவி, இறுதியாக அமைச்சர் பதவி என அனைத்தையு இழந்து, பொன்முடியின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்த நிலையில், விழுப்புரத்தின் ராஜாவாக இருந்த அவரது மதிப்பும் குறையத் தொடங்கி, அவர் டம்மி ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்முடியின் கையைவிட்டுப் போகும் விழுப்புரம்.?
அமைச்சராக முதலில் உயர்கல்வித்துறையை இழந்த பொன்முடி, அடுத்ததாக மாவட்ட பொறுப்பு, துணை பொதுச்செயலாளர் பதவி, இறுதியாக அமைச்சர் பதவி என அனைத்தையு இழந்து, பொன்முடியின் சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்த நிலையில், விழுப்புரத்தின் ராஜாவாக இருந்த அவரது மதிப்பும் குறையத் தொடங்கி, அவர் டம்மி ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரத்தின் முடிசூடா மன்னனாக இருந்துவந்த பொன்முடியின் பவர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது அமைச்சர் பதவியோடு விழுப்புரமும் பொன்முடியின் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது, விழுப்புரம் திமுகவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தையே தனது கண்ட்ரோலில் வைத்திருப்பவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான பொன்முடியின் சாம்ராஜ்யம் வீழத் தொடங்கியுள்ளது. தனக்கு பின்னால் தனது மகன் தான் என்ற அசட்டு நம்பிக்கையில் இருந்த பொன்முடிக்கு பேரிடியாக அமைந்துள்ளது தற்போதைய நிலை. தனது மகனின் அரசியல் எதிர்காலமே சுக்குநூறாய் போய்விடுமோ என்ற அச்சத்தில் தற்போது உள்ளாராம் பொன்முடி.
பொன்முடிக்கு அவரது ‘நாக்கே‘ எதிரியாக மாறிய கொடுமை
திமுக மூத்த நிர்வாகி, துணை பொதுச்செயலாளர், அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளில் ஜொலித்தவர் பொன்முடி. ஆனால் அவரது நாக்கே அவருக்கு எதிரியாகிவிட்டது. சர்ச்சைக்குரிய பேச்சுகளும், நடவடிக்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக அவரது பொறுப்புகளை காவு வாங்கத் தொடங்கியது.. ஓசி பஸ், sc தான நீ, எங்களுக்கா ஓட்டு போட்டு கிழிச்சீங்க என, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகைகளில் பேசி வந்தார். இதனால் கடும் கோபமடைந்த முதலமைச்சர் ஸ்டாலின், பொறுத்து பொறுத்துப் பார்த்து, பின்னர் செல்வாக்கு மிக்க உயர்கல்வித்துறையை பறித்து, டம்மியான வனத்துறைக்கு மாற்றி வார்னிங் கொடுத்தார். அதுவே பொன்முடிக்கு பெரிய அடியாக பார்க்கப்பட்டது.
பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கட்சித் தலைமை
அதே நேரத்தில், விழுப்புரம் மொத்தத்தையும் தனது கன்ட்ரோலில் வைத்திருந்த பொன்முடியின் ஃப்யூஸை பிடுங்கும் வகையில், கடந்த பிப்ரவரியில் ஒரு பெரிய நடவடிக்கையை மேற்கொண்டது திமுக தலைமை. விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் பொறுப்பாளராக, முன்னாள் எம்.பி.யும், பொன்முடியின் மகனுமான கௌதம சிகாமணி இருந்துவந்த நிலையில், மாவட்டத்தின் தலைநகரான விழுப்புரம் மற்றும் வானூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய விழுப்புரம் மத்திய மாவட்டம் உருவாக்கப்பட்டு, அதன் பொறுப்பாளராக எம்.எல்.ஏ-வான ஆர்.லட்சுமணன் நியமிக்கப்பட்டார். தனது மகன் தான் அடுத்து என நினைத்திருந்த பொன்முடிக்கு, தலைமையின் இந்த நடவடிக்கை பேரதிர்ச்சியை கொடுத்தது.
இதையடுத்து, லட்சுமணனுக்கு மறைமுகமாக பல வகையில் குடைச்சல் கொடுத்து, தனது எதிர்ப்பை காட்டி வந்தார் பொன்முடி. லட்சுமணன் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட்டம் கூடக்கூடாது, கோஷம் போடக்கூடாது, அவரை டம்மி ஆக்குங்கள் என தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டிருக்கிறார் பொன்முடி. அவ்வளவு ஏன், முதன்முதலில் லட்சுமணன் பதவியேற்று, முதல்வரை சந்திக்க சென்னை வந்தபோது, அவருடன் வெறும் 4 நிர்வாகிகளே வந்துள்ளனர். இப்படி, தன் கோட்டையில் இன்னொரு தலை நிமிரவே கூடாது என்பதில் குறியாக இருந்துள்ளார் பொன்முடி.
இந்த நிலையில், சமீபத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பொன்முடி பேசியிருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியதோடு, தலைமையின் கடும் கோபத்திற்கும் ஆளாகி, அவரது துணை பொதுச்செயலாளர் பதவியை பறித்துவிட்டது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் தனது அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார் பொன்முடி. எப்படியாவது அமைச்சர் பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என பொன்முடி நினைத்திருந்த நிலையில், அதுவும் கைவிட்டுப்போக, விரக்தியின் உச்சத்திற்கே போனார் பொன்முடி. பொன்முடிக்கு தலைமையிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் குறையக் குறைய, விழுப்புரத்தில் அவரது மதிப்பும் குறையத் தொடங்கியுள்ளது.
பொன்முடிக்கு எதிராக காய் நகர்த்தும் லட்சுமணன்.?
இதுதான் சரியான நேரம் என கருதும் லட்சுமணன், தனது ஆதரவாளர்களை திரட்டி பொன்முடிக்கு எதிராக காய் நகர்த்தி வருவதாகவும், பொன்முடியின் ஆதர்வாளர்களில் சிலரே லட்சுமணன் பக்கம் சாயத் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பொன்முடி முன்னிலையிலேயே குரலை உயர்த்தி தனது இருப்பை காட்டினார் பொன்முடியின் முன்னாள் ஆதரவாளர் புஷ்பராஜ். முன்னாள் எம்.எல்.ஏ-வான புஷபராஜ், லட்சுமணனின் தீவிர ஆதரவாளர். மேலும், லட்சுமணன் எம்.எல்.ஏ-வாக பதவியேற்றபோது, ஸ்டாலினை சந்திக்க வந்த அந்த 3 நிர்வாகிகளுள் இவரும் ஒருவர். இதுவரை பொன்முடி முன்பு பேசவே தயங்கியவர்கள், இன்று வாலாட்டத் தொடங்கியதோடு, பொன்முடியை வேறோடு காலி செய்ய பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோன பிறகு, அவர் விழுப்புரத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேசியுள்ளார். ஆனால் அப்போது, பாதிக்குப் பாதி என்ற எண்ணிக்கையிலேயே கூட்டம் வந்ததாகவும், பலரும் லட்சுமணன் கேங்கில் இணைந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜும் பொன்முடியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது. இப்படியான சூழ்நிலையில், தனது சாம்ராஜ்யம் வீழ்வதை எண்ணி வருந்திய பொன்முடி, பெரும் அப்செட்டில் வீடு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது.
திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், பழுத்த அரசியல்வாதியுமான பொன்முடிக்கு, அவரது நாக்கே எதிரியாகி, அவரை வீழ்த்தியது, திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





















