நெல்லை திமுக பிரமுகர் கொலையில் திடீர் திருப்பம் - சொந்த கட்சியை சேர்ந்தவரே கொலை செய்தது அம்பலம்
”தேர்தல் முன்பகை காரணமாகவும், தன்னை விட வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலும் அருண் பிரவீன் என்பவர் பொன்னுதாஸை கொலை செய்ததாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தகவல்”
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தெற்கு பஜார் அருகே தெற்கு உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திமுக 38ஆவது வார்டு செயலாளர் பொன்னுதாஸ் என்ற அபே மணி, இவருக்கு முருகம்மாள் என்ற மனைவியும் சுபேசன் மற்றும் சரண்யா என 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் பாளையில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அபே மணி தனது தாயார் பேச்சியம்மாளை கவுன்சிலராக போட்டியிட வைக்க கட்சியில் விருப்பமனு பெற்றுள்ளார்.
இந்த நிலையில் அபே மணி நேற்று முன்தினம் (29.01.22) இரவில் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடிந்து வீடு திரும்பும் போது வீட்டின் வாசல் வரை பின்னால் ஆம்னி கார் அவர் பைக் மீது மோதி உள்ளது. அதில் அவர் நிலை தடுமாறி கீழே விழ காரில் இருந்து வந்த மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் விட்டு தப்பியோடினர்.. பொன்னுதாஸ் என்ற அபே மணி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே தாய் கண் முன்னே உயிரிழந்தார்.
சத்தம் கேட்டு வந்த பொன்னு தாஸின் தாயார் பேச்சியம்மாள் நடந்த சம்பவத்தை பார்த்து கூச்சலிட்டுள்ளார். இரவு 11 மணி என்பதால் தெருவில் ஆள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் கூச்சல் சத்தம் கேட்டு மக்கள் திரண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து பொன்னுதாஸின் உடலை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சூழலில் தேர்தல் தொடர்பான முன் விரோதத்தில் ஏற்பட்ட கொலையா? அல்லது தொழில் ரீதியான கொலையா என போலிசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றவாளிகளை நெருங்கிய நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான அருண் பிரவீன் என்பவர் நெல்லை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்,
அதே போல கொலை நடந்த 36 மணி நேரத்தில் காவல்துறையினர் 8 பேரை கைது செய்துள்ளனர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பேச்சிமுத்து, கருப்பையா, மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், ஈஸ்வரன், ஆசைமுத்து, சாத்தான் குளத்தைச் சார்ந்த அழகுராஜ், பாளையங்கோட்டையை சேர்ந்த தேவராஜ் உட்பட 8 பேர் கைது கைது செய்யப்பட்டு உள்ளனர்,
இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும் பொழுது, கொலை செய்யப்பட்ட பொன்னுதாஸ் என்பவர் குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து கட்சி மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து கட்சி மட்டுமின்றி தொழில் ரீதியாகவும் வளர்ச்சியடைந்து வந்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி குத்தகைக்கு எடுத்த டாஸ்மாக் கடையை திறக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கறிஞராக பணியாற்றி வரும் அருண் பிரவீன் SFI இல் இருந்து உள்ளார், அதன் பின்னர் காங்கிரசிலும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அருண் பிரவீனை திமுகவில் பொன்னுதாஸ் அறிமுகம் செய்து வைத்து உள்ளார்.
இந்த தேர்தலிலும் பொன்னுதாஸின் தாயாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத அருண் பிரவீன் பொன்னுதாஸை சந்தித்து டாஸ்மாக் கடையையும் எடுத்து இருக்கிறாய், தற்போது கட்சியிலும் போட்டியிடுகிறாய், அனைத்திலும் நீயே நின்றால் நான் எதற்கு இருக்கிறேன், என்னை எதற்காக கட்சியில் சேர்த்து விட்டாய் என கூறி ஏற்கனவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது, இந்த சூழலில் தான் மனதில் வைத்திருந்த முன்பகை காரணமாக அருண் பிரவீன் இவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கொலை செய்து உள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் தன்னை விட இன்னொருவன் வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத சூழலில் திட்டமிட்டு கொலை செய்து இருப்பதாக கூறப்படும் சம்பவம் மேலும் அதிர்ச்சியையும் சோகத்தையும் அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.