நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : போட்டியிடும் இடங்களை நாளைக்குள் அனுப்ப வேண்டும் - மாவட்ட செயலாளர்களுக்கு திமுக உத்தரவு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. போட்டியிடும் இடங்களை நாளைக்குள் (31-ந் தேதி) கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28-ந் தேதியே தொடங்கிவிட்டது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய வரும் 4-ந் தேதிதான் கடைசி நாள் ஆகும். இந்த நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பாக தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பல இடங்களில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றுவிட்டாலும், சில இடங்களுக்கான கூட்டணிப் பங்கீடு இன்னும் நடைபெற்று வருகிறது.
ஆளுங்கட்சியான தி.மு.க.வுடன் அதன் தோழமைக் கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ”மு.க.ஸ்டாலின் தலைமையில் 27.1.2022-ல் காணொலி மூலமாக நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் வாய்ப்புள்ள இடங்களை அவர்களை அழைத்துப் பேசிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
கடந்த நாடாளுமன்ற/ சட்டமன்ற தேர்தலில் நம் கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக கலந்தாலோசித்து முடிவு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களைத் தவிர, கழகம் போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் பெயர் பட்டியலை 31.1.2022 (நாளை) தேதிக்குள் தலைமை கழகத்திற்கு மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனுப்பி வைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று விரும்புகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தி.மு.க. மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமை நிர்வாகிகளுடன் காங்கிரஸ்., வி.சி.க., தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தி.மு.க.வும், கூட்டணி கட்சியினரும் பல பகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருவதால் கூட்டணி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களை நாளைக்குள் முறைப்படுத்தி கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கூறியிருப்பதால், இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி பங்கீடு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுடனும் பா.ஜ.க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்