Govi Chezhiaan : “கோடை வெயிலுக்கு ரெயின்கோட் – துறையிலும் இப்படிதானா? அமைச்சர் மீது அதிருப்தி..?
’பட்டியலினத்தை சார்ந்த கோவி.செழியனுக்கு, பொன்முடியிடமிருந்த உயர்கல்வித் துறையை முதல்வர் பெற்றுத் தந்தது அனைவரது பாராட்டையும் பெற்றது. ஆனால், கோவி.செழியனின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன’

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் நடைபெற்ற பால் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பில், அவர்களுக்கு மழையில் போட்டுக்கொள்ளும் ‘ரெயின் கோட்டை’ இலவசமாக வழங்கியிருக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன். கொளுத்தும் வெயிலுக்கு குடைக் கொடுத்தால் கூட பராவயில்லை, எதற்கு இப்போது ரெயின் கோட் ? என்ற அந்த சங்க நிர்வாகிகளே புலம்பியுள்ளனர்.
தன் சொந்த நிதியில் இருந்து பால் விற்பனையாளர்கள் 130 பேருக்கு ரெயின் கோட் வழங்கியுள்ளார் அவர். அவரது நிதியில் தற்போதைக்கு உபயோகப்படும் வேறு ஏதேனும் பொருளை கூட எங்களுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஏதோ ஒன்றை கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை பதிவு செய்ய வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்தில் இந்த ரெயின் கோட்டை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என அவர்கள் தங்களுக்கிடையே பேசியிருகின்றனர்.
எதற்கு திடீர் ரெயின் கோட் – தஞ்சை எம்.பி
ஏன் வெயில் காலத்தில் பால் வியாபாரிகளுக்கு ரெயின் கொடுத்தீர்கள்? இதற்கு என்ன காரணம் என கேட்பதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனை நமது அலுவலகம் சார்பில் தொடர்புகொண்டபோது, அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. அதே நேரத்தில், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தஞ்சாவூர் தொகுதி எம்.பியான கல்யாணசுந்தரத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘ரெயின் கோட் கொடுத்தது நல்ல விஷயம்தான். ஒன்னும் கொடுக்கிறோம் என்றால் அதனை பாராட்ட வேண்டும், பதிலுக்கு அதை விமர்சிக்கக் கூடாது என்றார். அதே நேரத்தில், மழை, பனி ஆகிய இரண்டிற்கும் ரெயின் கோட்டை பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ள கல்யாணசுந்தரம், கோடை காலத்தில் மழையே பெய்யாதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார். மழை பெய்யும்போது அதனை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் இப்போது கூட டெல்டா மாவட்டங்களில் மழை இருக்கும் என்கிறார்கள் இந்த சூழலிலும் அந்த ரெயின்கோட்டை அவர்கள் பயன்படுத்துவார்கள் என்றும்’ கல்யாணசுந்தரம் விளக்கம் அளித்துள்ளார்.
கோவி செழியன் மீது எழும் விமர்சனங்கள்
உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடியிடமிருந்து அந்த துறையை பெற்று பட்டியலினத்தை சேர்ந்த கோவி.செழியனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியது மிகப்பெரிய பாராட்டை பெற்றது. பட்டியலின மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தையும் அங்கீகாரத்தை திமுகவும் அரசும் வழங்கி வருகிறது என்பதற்கு சான்றாக இந்த அறிவிப்பு வெளியானது.
ஆனால், மிக முக்கியத் துறையான உயர்கல்வித் துறையில் கோவி.செழியனால் சிறப்பாக செயலாற்ற முடியவில்லையென்றும், துறை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போதும் சரி, பிரச்னைகளை கையாளும்போதும் சரி, அவர் இந்த துறையை நிர்வகிக்க முடியாமல் திணறி வருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். புதிய துறை என்பதாலும் சிக்கலான துறை என்பதாலும் சிறிது காலம் அவருக்கு எடுக்கும் என்றிருந்த உயர்கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகளும் பல்கலைக்கழக நிர்வாகிகளும், கோவி.செழியனின் செயல்பாடுகள் தொடர்ந்து மந்தமாகவும், சொல்வதை புரிந்துக்கொள்வதில் அவருக்கு இருக்கும் சிரமத்தாலும் கடினமான சூழலை சந்தித்து வருகின்றனர். எதை சொன்னாலும் உடனடியாக எதற்கும் பதிலளிக்காமல், வெயின் பண்ணுங்க சொல்றேன் என அதனை காலம்தாழ்த்தி, தள்ளிப்போட்டு ஆற அமர அவர் ஒரு விஷயத்திற்கான முடிவு சொல்வதாகவும், தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்ட பிறகே ஒரு தீர்வுக்கு அவர் வருவதாகவும் இதனை வெளியில் சொல்ல முடியாத சூழலில் இருப்பதாகவும் அவர்கள் பேசி வருகின்றனர்.
பழைய பஞ்சாகத்தையே பாடும் செழியன்
அமைச்சர் ஆன பின்னரும் தன்னை யாரும் மதிப்பதில்லை என்று தஞ்சை உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மீது தொடக்கத்தில் குற்றச்சாட்டை வேறு சிலர் நபர் மூலமாக திமுக தலைமைக்கு கடத்தினார் கோவி.செழியன், இதனையறிந்த திமுக தலைமை அமைச்சர் கோவி.செழியனுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் தர வேண்டும் என்றும் அப்படி அவரை மரியாதை குறைவாக நடத்துபவர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினே கோவி.செழியனுக்கு ஆதரவாக பேசியதாக கூறப்பட்டது.
அதன்பின்னர், அனைத்து நிர்வாகிகளும் கோவி செழியனுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், மாவட்டத்திலும் சரி துறையிலும் சரி பெரிய முன்னெடுப்புகள் எதையும் அவர் முன்வந்து செய்வதில்லை என்று அதனை கண்டறிந்து தன்னுடைய செயல்பாடுகளை யாரும் குறை சொல்லிவிடுவார்களோ என்பதற்காக பேருக்கு ரெயின்கோட் கொடுப்பது உள்ளிட்ட சில விஷங்களை மட்டுமே அவர் செய்வதாகவும், அவர் மீது விமர்சனம் வந்துவிடாமல் இருக்க பழைய பல்லவியான ‘தனக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை’ என்பதை பிடித்துக்கொண்டு அவ்வப்போது அதனை எடுத்துவிட்டு தன் இருப்பை அவர் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்களே.





















