Cuddalore VCK PMK: கொதிக்கும் கடலூர் - முற்றும் பாமக & விசிக மோதல், மஞ்சக்கொல்லையில் நவ.1ல் நடந்தது என்ன?
Cuddalore VCK PMK: கடலூரில் பாமக மற்றும் விசிக இடையேயான மோதல் தொடர்பான முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Cuddalore VCK PMK: கடலூரில் பரபரப்பை கிளப்பி வரும் பாமக மற்றும் விசிக இடையேயான மோதலுக்கு காரணமாக, மஞ்சக்கொல்லை தாக்குதல் சம்பவம் அமைந்துள்ளது.
மதுபோதையில் சரமாரி தாக்குதல்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் வில்லியநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமம் தான் மஞ்சக்கொல்லை. இந்த கிராமத்தில் வன்னியர் சமுதாயத்தினர் அதிகமாக வசித்து வருகிறார்கள். அங்கிருந்து இருந்து இரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் மற்றறொரு கிராமம் தான் பு. உடையூர். இங்கே தலித் மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கும் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த செல்லதுரை தீபாவளிக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவர் நவம்பர் 1 ஆம் தேதி மாலை 7 மணியளவில் தனது சித்தப்பாவின் மகள் திருமணத்திற்காக பத்திரிகை வைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது தம்பியோடு பத்திரிகை வைத்துவிட்டு உடையூர் வழியாக தனது ஊருக்கு வந்து கொண்டிருந்த பொழுது ஆறு இளைஞர்கள் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம், எங்களுக்கு வழிவிடுங்கள் என்று செல்லதுரை கேட்டுள்ளார். இதனால் அங்கே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இது கைகலப்பாகவும் மாறியுள்ளது. அதில் செல்லதுரை பலத்த காயங்களோடு முகத்திலும் உடலிலும் ரத்தம் வழிய பேச்சு மூச்சு இல்லாமல் சாலையில் சரிந்துள்ளார். அவரை தாக்கிய கும்பல் அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.
போராட்டத்தில் குதித்த மக்கள்:
செல்லதுரை தாக்கப்பட்ட தகவல் காவல்துறைக்கு செல்ல, உடனடியாக போலீஸ் வந்து பார்த்த போது செல்லதுரைக்கு ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இதனிடையே, மஞ்சக்கொல்லை கிராமத்து பொதுமக்களும் அங்கே திரண்டனர். போலீசார் செல்லதுரையை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக அனுப்பி வைக்க முயன்ற போது, வாகனத்தை தடுத்து நிறுத்திய மஞ்சகொல்லையைச் சேர்ந்தவர்களோ தாக்கியவர்களை கைது செய்தால்தான் வாகனத்தை விடுவோம் என போராட்ட்த்தில் ஈடுபட தொடங்கினர்.
நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு செல்லதுரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர், அவரிடம் இருந்து வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அதனை வீடியோவாக பதிவுசெய்து கொண்டனர். அதனடிப்படையில் செல்லதுரையை தாக்கிய பு.உடையூர் கிராம இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து (வழக்கு எண் 330/2024). மறுநாள் நவம்பர் 2 ஆம் தேதி போலீஸார் கைது செய்தனர்.
கொடிக்கம்பம்பங்கள் சேதம்:
தாக்கப்பட்ட செல்லதுரை வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர், தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டவர்கள் தலித் இளைஞர்கள். இந்த நிலையில், மறுநாள் நவம்பர் 3 ஆம் தேதி காலை பாமக கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் செல்வ மகேஷ், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி உள்ளிட்டோர் செல்லதுரை குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக மஞ்சக்கொல்லை சென்றனர். அப்போது கோபம் அடைந்த வன்னியர் சங்கத்தினர் செல்லதுரையை தாக்கிய அனைவரையும் கைது செய்ய வேண்டும் திடீரென மஞ்சக்கொல்லையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அருள்மொழி சென்றதும், அந்த ஊரைச் சேர்ந்த அருள் செல்வி இந்த ஊரில் எந்த கட்சி கொடி கம்பமும் வேண்டாம் என்று கத்திக் கொண்டே மஞ்சக்கொல்லையில் வைக்கப்பட்டிருந்த விசிக கொடிக்கம்பம், பாமக கொடிக்கம்பம் இரண்டையும் கடப்பாறையால் உடைக்க முயன்றிருக்கிறார். அதில் விசிக கொடி கம்பம் இடிக்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆனது.
விசிகவினர் சர்ச்சை பேச்சு:
மஞ்சக்கொல்லையில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய அருள்மொழியை வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நவம்பர் 4 ஆம் தேதி விசிகவினர் கடலூரில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அந்த ஆர்பாட்டத்தில் விசிகவின் மாநில துணைச் செயலாளர் செல்வி முருகன், துணை மேயர் தாமரைச் செல்வன் மாவட்டச் செயலாளர் அறிவுடைநம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் செல்வி முருகன் பேசுகையில், விசிக கொடிக் கம்பத்தை அறுத்தவர்களின் கழுத்தை அறுப்போம். கலவரத்தைத் தூண்டும்படி பேசும் வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழியின் கழுத்தையும் அறுத்துருவோம் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமதாஸ் அறிக்கை:
இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கொக்கரிப்புகள், வெறுப்புப் பேச்சுகள், கொலை மிரட்டல்கள் உள்ளிட்ட அனைத்தையும் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றனர்.
கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளை, ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களாக இருந்தால், அலுவலகத்திற்கு அழைத்து உபசரிப்பது தான் திராவிட மாடல் காவல்துறையின் கொள்கையா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு:
கடந்த 7ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் செல்லத்துரைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் முதல் ஆளாக கண்டித்திருக்க வேண்டும். நீதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்குள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வன்னியர் விரோத நெருப்பு அதைத் தடுத்து விட்டது” என ராமதாஸ் தெரிவித்தார்.
வட தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக சாதிய கலவரங்கள் ஏதும் இல்லாமல் சுமூகமாக சூழல் நிலவியது. ஆனால் தற்போது மீண்டும் அந்த அச்சுறுத்தல் எழுந்துள்ளது. கடலூர் கலவரத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது வரை தமிழக அரசு சார்பிலும் காவல்துறையினர் சார்பிலும் எந்த ஒரு அசைவும் இல்லாமல் உள்ளது.