CP Radhakrishnan: ஜார்க்கண்ட் புதிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!
ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு 13 மாநிலங்களுக்கான ஆளுநர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், சிபி.ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சிபி.ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எனவும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழிசை வாழ்த்து
இவரை தொடர்ந்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது, ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மூத்த தலைவரும்,நான் பெரிதும் போற்றும் அண்ணன்,சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எல்.முருகன் வாழ்த்து
"பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அன்பிற்குரிய அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மன மகிழ்ச்சி அளிக்கிறது. அவரின் தேச நலப் பணிகள் மென்மேலும் சிறக்க மனமார வாழ்த்துகிறேன்” என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சி.பி. ராதாகிருஷ்ணன்
65 வயதான சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த 1957ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருப்பூரில் பிறந்தார். தூத்துக்குடியில் உள்ள வ.உ. சி கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்த இவருக்கு இளம் வயது முதலே அரசியலில் ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதோடு, தேசிய கொள்கைகளில் ஆர்வம் கொண்ட இவர், 1973ம் ஆண்டு முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங்கத்தில் இணைந்து பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கினார்.
தற்போது பாரதீய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார். அதோடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவர் பதவியை கடந்த 2016 முதல் 2019ம் ஆண்டு வரை வகித்து உள்ளார்.
வகித்த பதவிகள்
- 1998–99. உறுப்பினர், வணிகக் குழு மற்றும் அதன் துணைக் குழு
- உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
- உறுப்பினர், ஆலோசனைக் குழு, நிதி அமைச்சகம்
- 1999. 13வது மக்களவை உறுப்பினர் (2வது முறை)
- 1999–2000. உறுப்பினர், வணிகக் குழு
- உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டம்
- 1999–2000. உறுப்பினர், வணிகக் குழு
ஜார்கண்ட் மாநில ஆளுநராக, சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் இவர் அந்த பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.