CM MK Stalin: திமுக தலைவராக 2வது முறையாக தேர்வு - மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் தொலைபேசியில் வாழ்த்து
தி.மு.க. தலைவராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, ராகுல்காந்தி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாக, கடந்த 9-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். தி.மு.க. தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவராக 2வது முறையாக தேர்வாகியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சியான காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ராகுல்காந்திக்கு மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமைப் பயணம் மக்களின் ஆதரவுடன் எழுச்சியுடன் நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டு, அதற்கு வாழ்த்துக்களை கூறினார்.
முன்னதாக, கடந்த 9-ந் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அதன்பிறகு பேசிய மு.க ஸ்டாலின், "தமிழர்களின் சுய மரியாதையையும் , தமிழ் நாட்டின் நலனையும் காக்கின்ற திமுகவின் தலைவராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளேன். உங்களின் ஒருவனான தலைவனாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளேன். தொண்டர்களுக்கு நன்றி. தி.மு.க. தோன்றிய காலத்தில் எத்தனை உணர்ச்சியும், சுறுசுறுப்பும் இருந்ததோ அப்படியே இயங்கி வருகிறோம். தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினர்களால் 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளேன்” என்றார்.
தி.மு.க. பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பி. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தி.மு.க. துணைப்பொதுச்செயலாளராக திண்டுக்கல் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தி.மு.க. தலைமை நிலைய முதன்மை செயலாளராக அமைச்சர் கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்வு :
தி.மு.க.வின் தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, கு.பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.