பறக்கும் நாற்காலிகள்... உடையும் மண்டைகள்... மீண்டும் தொடங்கும் காங்கிரஸ் ‛ரெஸ்ட்லிங்’
கார்த்திக் சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்த இந்த ‛ரெஸ்ட்லிங்’ காங்கிரஸிற்கு புதிது இல்லை என்றாலும், இது தொடர்கிறது என்பது தான் வருந்தக்கூடியது.
காங்கிரஸ் கட்சியும் உள்கட்சி மோதலும் என்றுமே பிரிக்க முடியாத இரட்டை குழந்தைகள். சமீபமாக தான் அவர்களின் கூட்டங்களில் மோதல் இல்லாமல் இருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தால் காங்கிரஸ் கூட்டங்கள் களேபரமாய் இருக்கும். வேட்டி அவிழ்ப்பு, நாற்காலி வீச்சு, அடிதடி, உதை என ஆக்ஷன் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் அங்கு இடம் பெறும். காலத்தின் போக்கில் அது மாறியிருக்கும் என்று பார்த்தால், ‛வயசானாலும் எதுவும் மாறல...’ என படையப்பா டயலாக் மாதிரி, மீண்டும் காங்கிரஸ் கோஷ்டி மோதல்கள் அரங்கேறத் துவங்கியிருக்கின்றன.
காங்கிரஸ் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என அதன் தலைவர்கள் அடிக்கடி மேடையில் பேசுவதுண்டு. அது ஏதோ... ஆட்சி சம்மந்தமான விசயம் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் அது அல்ல, முன்பு போல கோஷ்டி பூசல் என்று கட்சியினர் புரிந்து கொண்டார்கள் போலும். இப்போது எங்கு காங்கிரஸ் கூட்டம் நடந்தாலும் அங்கு களேபரம் தான். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பங்கேற்ற கூட்டத்தில் அவரை எதிர்த்து கேள்வி கேட்டு, கட்சி பதவியை இழந்த காங்கிரஸ் நிர்வாகியின் சம்பவம் ஓய்வதற்குள்... தற்போது கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடந்த உள்ளாட்சி தேர்தல் கூட்டத்தில் கடுமையான மோதல் நடந்துள்ளது. இதோ அதன் விபரம்:
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி தலைமையில் நடைபெற்றது . இதில் காரைக்குடி தொகுதி எம்எல்.ஏ மாங்குடி முன்னாள் எம்.எல்.ஏ கே.ஆர் ராமசாமி மற்றும் தேவகோட்டை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அப்போது பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தொகுதி எம்.எல் ஏமாங்குடி தேவகோட்டை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசனை செய்வது கிடையாது தன்னிச்சையாக செயல்படுகிறார். ஏற்கனவே தேவகோட்டையில் காங்கிரஸ் கட்சி இரு விரிவாக உடைந்து கிடைக்கிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
அப்போது முன்னாள் எம்.எல் ஏ கே.ஆர் ராமசாமி சமாதனம் செய்ய முயன்றார். ஆனால், யாரும் கட்டுப்படவில்லை. மாறாக நாற்காலிகளை கொண்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். அதன் விளைவு, சிலருக்கு மண்டை உடைந்தது. சண்டை ஆரம்பித்ததுமே அரங்கில் இருந்த அனைவரும் உள்ளே இருந்து சிதறி ஓடினர். இதனால் அந்த பகுதியே களேபரமானது.
கார்த்திக் சிதம்பரம், மாங்குடி எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்து இந்த ‛ரெஸ்ட்லிங்’ காங்கிரஸிற்கு புதிது இல்லை என்றாலும், இது தொடர்கிறது என்பது தான் வருந்தக்கூடியது. தலைமுறை மாறினாலும், காங்கிரஸின் இந்த மோதல் மட்டும் மாறவே இல்லை.