MK Stalin 70th Birthday: 21 லட்சம் போன்கால்.. 17 லட்சம் செல்ஃபிகள்.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் தொலைபேசி வழியாக அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உலக அளவில் டிரெண்டிங்கான முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாள் வாழ்த்து, தற்போது மேலும் சில மைல்கற்களைத் தொட்டிருக்கிறது. அது என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
செல்ஃபி வித் சி.எம்., சி.எம்.க்கு வாழ்த்து:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா கடந்த 1-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் சிறப்பாக கொண்டாடியது மட்டுமில்லாமல், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தொண்டர்களும் பொதுமக்களும் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவும், அவருடன் செல்ஃபி எடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகளை திமுக-வின் புதிய அங்கமான தகவல் தொழில்நுட்ப அணி (ஐடி விங்க்) செய்திருந்தது. அவருக்கு தொலைபேசி வாழ்த்து தெரிவிக்க சிறப்பு எண்ணும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தி.மு.க. ஐடி பிரிவினர் செய்திருந்த இந்த சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொலைபேசி வாயிலாக மட்டும் 21 லட்சத்து 67 ஆயிரத்து 411 அழைப்புகளில் வாழ்த்துகள் குவிந்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க செய்த வரைகலை ஏற்பாட்டின்படி 16 லட்சத்து 75 ஆயிரத்து 484 பேர் செல்ஃபி எடுத்ததாகவும் திமுக ஐடி விங் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ப்ளாஷ் மாப்:
மேலும் தமிழகத்தில் முதல்முறையாக அரசியல் தலைவர் ஒருவரின் பிறந்தநாள், மேற்கத்திய நாடுகளில் பிரபலமான “ப்ளாஷ் மாப்” ( Flash Mob) முறையில், சென்னையில் பிரபலமான ஷாப்பிங் மாலில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என பிறந்தநாள் நிகழ்ச்சிகளை, 28-ம் தேதியை தொடங்கி வைத்து அரங்கேற்றியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினரும் திமுக “ஐடி விங்” செயலாளருமான டிஆர்பி ராஜா ஆகியோர் தொடங்கிவைத்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, தொலைபேசி வாயிலாக தமக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும், தம்முடன் “விர்சு்சுவல்” முறையில் செல்ஃபி எடுத்தவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
தனக்கு செல்போன் மூலமாக வாழ்த்து தெரிவித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஆடியோ மெசேஜ்” வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இருந்தும், இந்தியா முழுவதில் இருந்தும், உலகின் பல நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் இருந்தும் அழைப்புகளை பெற்றதில், தாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
தி.மு.க.வினர் கொண்டாட்டம்:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி உள்பட நாட்டின் பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தி.மு.க.வினர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அன்னதானம், 1-ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கினர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கொண்டாடும் 2வது பிறந்தநாள் இதுவாகும். மேலும், அவரது பிறந்தாள் பரிசாக ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றிருப்பதும் தி.மு.க.வினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.