’நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கூட்டியே ஆயத்தம்’ வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசப்போவது என்ன..?
'தமிழ்நாட்டில் இப்போதே நாடாளுமன்ற தேர்தல் ஜூரம் பரவத் தொடங்கியிருக்கும் நிலையில், இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் களத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது’
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழக கட்சிகள் முன் கூட்டியே தயாராகி வரும் நிலையில், அதற்கு ஒரு படி முன்னர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது ஆளும் திமுக. அதற்கான ஆயத்த பணிகளை ஏற்கனவே அந்த கட்சி தொடங்கி விட்ட நிலையில், இன்று திருச்சியில் நடைபெறும் டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
2019 வெற்றியை தக்க வைக்குமா திமுக ?
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இப்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் கைப்பற்றிவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோதே தமிழகத்தில் 38 தொகுதிகளை வென்றுவிட்ட நிலையில், இப்போது ஆளுங்கட்சியாக இருப்பதால் வெற்றி தொகுதிகள் குறைந்துவிடக் கூடாது என்றும் அப்படி குறைந்தால் அது ஆட்சி மீது தமிழக மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை காட்டிவிடுவதாக அமைந்துவிடும் என்றும் திமுகவினர் எச்சரிக்கையாக இருக்கின்றனர். ஒருவேளை, அப்படி வெற்றி பெறும் தொகுதிகள் குறைந்துவிட்டால் அதனை எதிர்க்கட்சிகள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு திமுகவிற்கு குடைச்சல் கொடுப்பார்கள் என்பதாலும் 40/40 என்ற முழக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதும் முன் வைத்து வருகிறார். ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு அவர் பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூட இதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.
திருச்சி கூட்டத்தில் பேசப்போவது என்ன ?
அதன் காரணமாகவே, முதல்வர் மு.க.ஸ்டாலினும் திமுக எம்.பிக்கள் கூட்டத்திலும் கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் இதனை வலியுறுத்தியிருந்தார். அதனடிப்படையில் இன்று திருச்சி கருமண்டபம் ராம்ஜி நகரில் நடைபெறும் டெல்டா மாவட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் பங்கேற்று அவர்களை உத்வேகப்படுத்த இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த கூட்டத்தில் அரியலூர், பெரம்பலூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை மத்தி, திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மத்தி, புதுக்கோட்டை தெற்கு, புதுக்கோட்டை வடக்கு மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
நாளை மறுநாளான ஜூலை 28ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ‘என் மண் ; என் மக்கள்’ என்ற பிரம்மாண்ட பாத யாத்திரையை தொடங்கவுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்படவுள்ள சூழலில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இன்னும் நாடாளுமன்ற தேர்தல் வர கிட்டத்தட்ட 9 மாதங்கள் இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இப்போதே தேர்தல் ஜூரம் பற்றி படரத் தொடங்கியிருக்கிறது. வரும் நாட்களில் தமிழக அரசியலில் விறுவிறுப்புகளுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது..!