Sasikala Update: சசிகலா உடன் பேசிய நிர்வாகி கார் எரிப்பு; பதிலடி தருகிறதா அதிமுக?
சசிகலா உடன் பேசிய ராமநாதபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளராக இருந்த வின்சென்ட் ராஜாவின் காரை அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தது பரமக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலகாவனூர் கிராமத்தை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜா. அதிமுகவில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பொறுப்பை வின்சென்ட் ராஜா வகித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 8 ஆம் தேதி வின்சென்ட் ராஜாவை தொடர்பு கொண்டு சசிகலா பேசிய ஆடியோ வெளியானது. அதில் அதிமுகவை தலைமையேற்று நடத்தவேண்டும் எனவும் நான் உங்களிடம் பேசுவது அதிமுக தலைமைக்கு தெரிந்து என்னை கட்சியில் இருந்து நீக்கினாலும் பரவாயில்லை என்றும் வின்சென்ட் பேசியிருந்தார். இதனையெடுத்து, வின்சென்ட் ராஜா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் சசிகலாவின் ஆதரவாளரான வின்சன்ட் ராஜாவின் பிளாட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி எரித்தனர்.
அப்போது திடீரென சத்தம் கேட்டதால் தனது செல்போனில் உள்ள சிசிடிவி காட்சிப் பதிவை பார்த்த வின்சென்ட், கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததையும் அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்துள்ளார். உடனடியாக கதவைத் திறந்து வெளியே செல்லாமல் போலீசாருக்கு தகவல் வின்செண்ட் தகவல் கொடுத்த நிலையில் தாலுகா போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் காருக்கு தீவைத்த அடையாளம் தெரியாத நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலை ஆன பின் தி.நகரில் உள்ள இல்லத்தில் இருந்து அறிக்கைகளையும் முக்கிய நபர்களின் சந்திப்புகளையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அம்மா ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை மூலம் அறிவித்த நிலையில் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி அதனை ஆடியோவாக வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சிக்குள் சண்டை போட்டுக் கொள்வது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், நாங்களெள்ளாம் வளர்த்தக் கட்சி கண்முன்னே சிதைவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் சசிகலா பேசி இருந்தார்.
இதுவரை ஐம்பதிற்கு மேற்பட்ட தொண்டகளிடம் பேசி சசிகலா ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த பின்பு சசிகலாவுடன் தொலைபேசி வாயிலாக பேசியவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வின்சென்ட் ராஜாவும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவரது கார் எரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . சசிகலாவிடம் பேசும் போது, தற்போதுள்ள அதிமுக தலைமையை விமர்சிப்பதற்கு தக்க பதிலடி தரவே இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து