KP Ramalingam about Deputy CM: "உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தால் பாஜக வரவேற்கும்" -பாஜக துணைத்தலைவர் அதிரடி.
ஜனநாயக ரீதியாக தற்போது உள்ள முதல்வருக்கு தகுதி இல்லை என்பதால் திமுகவினர் துணை முதல்வரை அறிவிக்கிறார்கள் என்றும் கூறினார்.
பிரதமர் மோடியின் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் சேலம் மாநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநில பாஜக விவசாய அணி செயலாளர் பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கலம் கலந்து கொண்டு 4000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், 1500 பேருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள், 2000 பெண்களுக்கு புடவை, 50 வியாபாரிகளுக்கு தள்ளுவண்டி, 100 வியாபாரிகளுக்கு குடை, 150 பேருக்கு ஹெல்மெட், 25 பெண்களுக்கு தையல் இயந்திரம், 50 விவசாய குடும்பங்களுக்கு பெருவிடை நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்தநாள் விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் மிக பிரம்மாண்டமாக இதுவரை யாரும் செய்திடாத வகையில் நான்காயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்றார்.
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தியது குறித்த கேள்விக்கு, பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டுமே பாஜக எதிர்க்கிறது. மற்றபடி பெரியாரின் கொள்கைகளும் பல நல்ல விஷயங்களும் உள்ளது. அவரின் சமூக நீதி கொள்கைகளை கடைப்பிடிக்காமல் பெரியாருக்கு மாலை போடுவதும், பொதுக்கூட்டம் நடத்துவதும் மட்டும் போதாது என்றார். தவறான வழியில் போனால் மக்கள் அவரை பார்த்து கொள்வார்கள் என்றார். மேலும் பிரதமர் ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு விஜய் போதாது, ஒரு லட்சம் விஜய்கள் அரசியலுக்கு வர வேண்டும். தவெக தலைவர் விஜய் நல்ல வழியில் போனால் நிச்சயம் பாராட்டுவோம் என்றார்.
மது விலக்குக்காக விசிக நடத்தும் மாநாட்டை வரவேற்பதாக தெரிவித்த ராமலிங்கம், மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்பது திருமாவளவனை அவமதிப்பதோடு, மக்களை ஏமாற்றும் செயல் என்றார். மேலும் சீட்டுக்காகவும் ஓட்டுக்காகவும் இந்த மாநாட்டில் பாஜகவை புறக்கணிக்கிறார்கள் என்று சாடினார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு, அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களை திமுக வைத்துள்ளது. அவர்கள் யாரை வேண்டுமானாலும் துணை முதல்வராக அறிவிக்க முடியும். ஜனநாயக ரீதியாக சட்டப்பேரவையில் அதிக பெரும்பான்மை வைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர், அமைச்சராக உள்ள ஒருவர் துணை முதல்வராக அறிவிக்கப்படலாம். முதல்வரின் இயலாமை காரணமாகவே உதயநிதியை துணை முதல்வராக்க நினைக்கிறார்கள். உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்தால் பாரதிய ஜனதா கட்சி வரவேற்கும். ஜனநாயக ரீதியாக தற்போது உள்ள முதல்வருக்கு தகுதி இல்லை என்பதால் திமுகவினர் துணை முதல்வரை அறிவிக்கிறார்கள். அவர்களிடம் முழு மெஜாரிட்டி உள்ளதால் அவர்களை யாராலும் தடுக்க முடியாது என்ற ராமலிங்கம் டெல்லியில் முதல்வர் மாற்றத்தை பாஜக சார்பில் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஒரு பகுதியில் இரண்டு நாள் தொழிலதிபர்களை சந்தித்தது புதிது. ஒரு வணிகர் அவரது கருத்தை தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் இதற்கு உண்டான நடவடிக்கையை எடுப்பார் என்று தெரிவித்தார்.