ஆடுகள் மட்டுமா அண்ணாமலையின் சொத்து...? வேட்புமனு தாக்கலில் அவர் குறிப்பிட்ட சொத்துக்கள் இதோ!
500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ள நிலையில் தன்னிடம் சில ஆடுகள் மட்டும்தான் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்திருந்தார்.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் சில குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். மேலும் மின்சார கொள்முதலில் ஊழல் நடப்பதாகவும் கூறியிருந்தார். இதனை மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலை இதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். மேலும் கோபாலபுரம் பிஜிஆர் எனர்ஜி மின்சார அமைச்சகம் செந்தில் பாலாஜி இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்... விடை எளிதில் புரியும் எனவும் ட்விட்டரில் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். அவரது இந்த தொடர் பதிவுகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் பிஜிஆர் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் தினேஷ்குமார் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் பிஜிஆர் நிறுவனம் தொடர்பாக ஆதாரங்கள் இல்லாமல் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். ஆகையால் பிஜிஆர் நிறுவனத்துக்கு ரூ500 கோடி நட்ட ஈடு தர வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இந்த வக்கீல் நோட்டீஸை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அண்ணாமலை.
அதில் 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டுமெனவும், 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் அந்த நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளித்து ட்வீட் செய்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தான் ஒரு சாதாரண விவசாயி, தன்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான் என கூறியுள்ளார். திமுக அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்றும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது சந்திப்போம் எனவும் அண்ணாலை தெரிவித்துள்ளார். அண்மையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முறைகேடு புகார்களை முன்வைத்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பிஜிஆர் நிறுவனத்திற்கு மின்வாரியம் சலுகைகளை வழங்கி உள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். அண்ணாமலையின் வேட்புமனு தாக்கலின் போது கொடுக்கப்பட்ட சொத்து விவர நகல்களும் ஷேர் செய்யப்பட்டு இதுதான் ஒரு சாதாரண விவசாயியின் வருமானமா? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
வேட்புமனு தாக்கலுக்கு அண்ணாமலை கொடுத்த சொத்து விவரம்:
அசையும் சொத்துக்கள்:
கையிலுள்ள ரொக்கமாக தன்னிடம் 1 லட்சம் ரூபாயும் தன் மனைவி அகிலாவிடம் ஒன்றரை லட்சம் ரூபாயும் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இரு வங்கிக்கணக்குகள் வைத்துள்ளார், அதில் கர்நாடக எச்டிஎஃப்சி வங்கியில் 12,59,849 ரூபாய் இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். கரூர் கனரா வங்கியில் 25,02,000 ரூபாய் வைத்துள்ளாதாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது மகன் அர்ஜுனுடன் மனைவி அகிலா வைத்திருக்கும் ஜாய்ண்ட் அக்கவுண்டில் 47,157 ரூபாய் 20 பைசாவும், மனைவியின் பெங்களூர் எச்டிஎஃப்சி வங்கி கணக்கில் 13,33,670 ரூபாய் 80 பைசாவும் வைத்துள்ளாதாக தெரிவித்தார். ஷேர் மார்க்கெட் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் ஆகியவற்றில் 3,07,520 ரூபாய் 55 பைசா இவர் பெயரிலும் மனைவி பெயரிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 64 லட்ச ரூபாய் மனைவி அகிலா கடனாக கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 7 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி காரை 2017ல் வாங்கியதாக கூறியுள்ளார். 300 கிராம் தங்க நகைகள் மனைவி அகிலாவிடம் இருப்பதாக கூறியுள்ளார், அதன் மார்ச் மாத மதிப்பு சுமார் 12,95,000 ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். இதெல்லாம் சேர்த்து அசையும் சொத்துக்களென தன்னிடம் 46,13,849 ரூபாயும் தன் மனைவியிடம் 94,73,348 ரூபாய் 55 பைசாவும், ஆக மொத்தம் 1,40,87,197 ரூபாய் 55 காசுகள் உள்ளதாக அவரே குறிப்பிட்டுள்ளார்.
அசையா சொத்துக்கள்:
கோயம்புத்தூர் மாவட்டம் புலியங்குளம் கிராமத்தில் தனது மனைவிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலும், சின்னதாராபுரம் கிராமத்தில் தனக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் விவசாய நிலங்கள் இருக்கின்றதென குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அண்ணாமலை தேர்தல் வேட்புமனு தாக்கலில் அசையும் அசையா சொத்துக்கள் மதிப்பு 2 கோடியே 90 லட்சத்து 87 ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஏழு ரூபாய் ஐம்பத்தைந்து காசுகள் என தெரிவித்துள்ளார். அவற்றுள் அவர் தனது ட்விட்டில் குறிப்பிட்டுள்ள 'சில ஆடுகள்' அடக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.