ABP நாடு Exclusive: ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆவதை தடுத்தது யார்? - பா.ஜ.க., கே.டி.ராகவன் பேட்டி
தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன், ABP நாடு டிஜிட்டலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது....
1. தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர் நியமனம், எப்படி பார்க்கறீங்க?
மிக இளம் வயதிலேயே தலைவராகியிருக்காரு. இளைஞர்களிடையே இது புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கு. மிகவும் விஷன் இருக்கற தலைவராகப் பார்க்கிறோம். இவர் பொறுப்பு வகிக்கிற காலக்கட்டத்துல தமிழ்நாடு பா.ஜ.க. நல்ல உயரத்தை எட்டும் என்கிற நம்பிக்கை இருக்கு.
2. இளம் தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட என்ன காரணம்?
பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை வயது பெரிய விஷயமில்லை. மூத்த தலைவர்களுக்கான தேவை இங்கே எப்போதும் இருக்கும். வயது வேறுபாடு எல்லாம் பாரதிய ஜனதாவில் கிடையாது. வெங்கையா நாயுடு தலைவராக இருக்கும்போது கூட 'President presides, committee decides' என்பார்.
3. திராவிடர் கழக தமிழர் பேரவையின் சுப.வீரபாண்டியன் ‘இங்கு முருகன்களுக்குதான் வாய்ப்பு வழங்கப்படும் ஹெச்.ராஜாக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது, ஏனெனில் இது திராவிட மண்’ என்பது போன்ற ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதைப்பற்றி உங்கள் கருத்து?
‘ஹெச்.ராஜாவும் தமிழர்தானே.அவரும்தானே அகில இந்திய செயலாளராக இருந்திருக்கிறார். அவர் சாதி ரீதியாகக் குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். பாரதிய ஜனதாவில் ஜாதி கிடையாதுங்க. இங்கு எல்லோரும் தலைவர்களா இருந்திருக்காங்க. தமிழ்நாடு ஜன சங்கத்தின் முதல் தலைவரான வி.கே.ஜான் ஒரு கிருத்தவர்.
4. பாரதிய ஜனதாவில் தலைமை பொறுப்புக்கு வரவேண்டுமென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ்.இல் இளம் வயதிலிருந்தே இருந்திருக்க வேண்டுமா?
அப்படி இல்லை. ஆர்.எஸ்.எஸ்., தொடர்பு பாரதிய ஜனதாவில் எல்லோருக்குமே உண்டு. நாங்கள் ஆர்.எஸ்.எஸ்.,ன் ஸ்வயம் சேவக்குகளா.... என்றால், ஆமாம். அதற்காக ஆர்.எஸ்.எஸ்.இல் பொறுப்பு வகித்திருக்க வேண்டிய அவசியமில்லை.
5. பாரதிய ஜனதா தலைவராக கே.டி.ராகவன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தப்போ வேறு ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் கே.டி.ராகவனுக்கு மகிழ்ச்சியா?
அண்ணாமலை ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்தப்போ மிகச்சிறந்த அதிகாரியாகப் பணியாற்றினார். அவருக்கு ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் நியமிக்கப்பட்டபோது பல மட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக பலரிடம் அபிப்பிராயங்கள் கேட்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சியல்ல மேலிடம் நேரடியாக முடிவு செய்வதற்கு.
6. தன்னை கன்னடக்காரர் எனச் சொல்லிக்கொண்டவர் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராகியிருக்கிறார், மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?
அவர் தமிழர், நம்மூர் கோயம்புத்தூர்காரர். வேலை செய்த இடத்தில் ‘ஜெய் கன்னடா’ என்று சொல்வார்கள் அதனால் அவர் சொன்னார்.அவ்வளவுதான். வரவிருக்கற மூன்று ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது.அதனால் கட்சியை பலப்படுத்த வேண்டிய வேலையில் ஈடுபடுகிறோம். அண்ணாமலைக்கு அந்த பொறுப்பு இருக்கு. 2024 பாராளுமன்றத் தேர்தலை நோக்கி எங்கள் பயணம் இருக்கும்.
7. அதிமுகவுக்கு அமைச்சரவையில் வாய்ப்புகள் இல்லாமலேயே போகுதே?
அதற்கு பாரதிய ஜனதா நிச்சயம் காரணம் அல்ல. எங்கள் கூட்டணியில் 2019லேயே அமைச்சர் பொறுப்பு கூட்டணியில் இருந்த அத்தனை கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.ஆனால் ஒரு கட்சியிலிருந்து அமைச்சர் பொறுப்புக்கான நபரை அந்தக் கட்சிதான் பரிந்துரை செய்ய வேண்டும். அவர்கள் பரிந்துரை செய்தார்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி என்று முடிவு செய்துதான் மற்ற கட்சிகளுக்கு பொறுப்பு கொடுத்தோம்.
8.தமிழ்நாடு என்று திமுக அரசு சொல்லத் தொடங்கியதும் கொங்குநாடு என்கிற திரியை பாரதிய ஜனதா கட்சி கொளுத்திப்போட்டுள்ளதே?
கொங்குநாடு என்பது கொங்கன் போன்று ஒரு பகுதிதானே அதனை அப்படிதானே அழைக்க வேண்டும்!
9. தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாட்டைப் பிரிப்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடா?
இல்லை.
10.கோவை பாரதிய ஜனதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளதே?
பார்த்தோம். அப்படிப் போடக்கூடாது எனச் சொல்லியிருக்கிறோம். தமிழ்நாடு பாஜகவுக்கு அந்த எண்ணம் இல்லை.
11.வானதி சீனிவாசன் கொங்குநாடு பற்றி ட்வீட் போட்டாரே?
ஒரு பிரதேசம் பற்றி அந்தப் பகுதியில் உள்ள எங்கள் தலைவர் ஒருவர் தகவல் போடுவதில் எதுவும் தவறில்லையே.அதில் எதுவும் பொய்யாக இருக்கா? அவங்க தனிமாநிலம் வேண்டும் எனக் கேட்கலையே!
12. கரு.நாகராஜன் அரசு இதனைப் பரிசீலனை செய்யவேண்டும் எனச் சொல்லியிருக்காரே?
தமிழ்நாடு பாரதிய ஜனதாவுக்கு அந்த நிலைப்பாடு இல்லை. நான் அவரிடம் கேட்டேன்.தான் அவ்வாறு அந்த பொருள்படும்படி சொல்லவில்லை என விளக்கம் கொடுத்திருக்கிறார்....
கே.டி.ராகவனின் முழுபேட்டியைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ லிங்கை க்ளிக் செய்யவும்...