Watch Video : திருவள்ளுவர் சிலைக்கு விபூதி பூசிவிட்டு, மாலை அணிவித்த பாஜக வேட்பாளர்.. கிளம்பும் விவாதம்..
Aswathaman: பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவருக்கு விபூதி வைத்து மாலை அணிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளுவரை வைத்து பாஜகவினர் மத அரசியல் செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் நிலையில், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவருக்கு விபூதி வைத்து மாலை அணிவித்தது பேசு பொருளாகியுள்ளது.
திருவள்ளுவருக்கு திருநீறு:
திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சாத்தனூர் பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவருக்கு மாலையிட சென்ற பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருவள்ளுவரின் நெற்றியில் திருநீறு இல்லாததால் விபூதி மற்றும் குங்குமம் எடுத்து வரச்சொல்லி, விபூதி குங்குமம் திருவள்ளுவர் சிலையின் நெற்றியில் பூசி, பின்னர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— News.Source (@NewsSource11) April 11, 2024
மக்களவை தேர்தல்:
தமிழ்நாட்டில் மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பாஜக, பாமக, , ஓபிஎஸ் கட்சி,அமமுக, தமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அஸ்வத்தாமன், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சாத்தனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அஸ்வத்தாமன், அங்கிருந்த பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவருக்கு மாலையிட சென்றார்.
சர்ச்சை:
அப்போது திருவள்ளுவர் நெற்றியில் திருநீறு இல்லாததால் விபூதி மற்றும் குங்குமம் எடுத்து வரச் சொல்லி, விபூதி குங்குமம் திருவள்ளுவருக்கு வைத்து, பின்னர் மாலை அணிவித்து வழிபாடு செய்தார்.
இதுகுறித்து அருகிருந்த எதிர்கட்சியினர் தெரிவிக்கையில், திருவள்ளுவர் சாதி- மதம் ஆகியற்றுக்குள் அடக்க முடியாதவர், அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் படியான கருத்துக்களை தெரிவித்தவர். பாஜகவினர் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசுவதாகவும், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதாகவும் குற்றச்சாட்டு வைத்தனர். இந்நிலையில், திருவள்ளுவர் சிலைக்கு, பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் திருநீறு வைத்தது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கெனவே திருவள்ளுவர் தினத்துக்கு சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திருவள்ளுவர் காவி உடையில், திருநீறு அணிந்து இருப்பது போன்ற புகைப்படத்தைப் பதிவிட்டு, “திருவள்ளுவர் தினத்தில், தமிழ்நாட்டில் பிறந்த புலவரும், தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாச துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன்” என பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது