C.V. Shanmugam on Annamalai: மாமூல் வாங்கியவர் அண்ணாமலை; விருப்பம் இல்லை என்றால் வெளியேறுங்கள்.. கடுமையாக சாடிய சி.வி. சண்முகம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை, பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள், ஏழை மக்களை ஏமாற்றி பண மோசடி செய்பவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்குபவர் தான் இந்த அண்ணாமலை. அப்படிப்பட்ட அண்ணாமலை எங்களின் ஆளுமை மிக்க தலைவரைப் பற்றி பேச தகுதியற்றவர்” என கூறினார்.
மேலும், “ எங்களது தலைவர் இந்தியாவில் யாரையும் சென்று பார்த்ததில்லை. ஆனால் இந்தியா முழுவதும் உள்ள தலைவர்களில் குறிப்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய பிரதமர் உட்பட அனைவரும் போயஸ் கார்டனில் வந்து தலைவரை பார்த்துச் சென்றுள்ளனர், அப்படிப்பட்ட தலைவரைப் பற்றி பேச முன்னாள் காவல் அதிகாரிக்கு எந்த யோகிதையும் இல்லை. அதிலும் குறிப்பாக ஊழலைப் பற்றி பேச தமிழ்நாடு பாஜகவுக்கு எந்த தகுதியும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்றவர் பாஜக தலைவர் என்பது அவருக்கு தெரியாது, அப்போது எதாவது போலீஸ் ஸ்டேசனில் மாமூல் வாங்கிக்கொண்டு இருந்திருப்பார், அப்போதெல்லாம் இவர் கட்சியில் இல்லை” என கூறினார்.
மேலும், ”ஊழலைப் பற்றி பேசு அண்ணாமலை, உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற முதலமைச்சர் இவர் பிரச்சாரத்துக்குச் சென்ற கர்நாடக பாஜக முதலமைச்சர் தான். ஊழலைப் பற்றி பேசவும் அதிமுகவைப் பற்றி பேசவும் அருகதையற்றவர் அண்ணாமலை. மேலும், பாஜக தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தமிழ்நாட்டில் அதிமுகதான் பெரிய கட்சி அவர்கள் தலைமையிலான கூட்டணி தொடரவேண்டும் என கூறியபோது அண்ணாமலை தனது வாயை எங்கு வைத்துக்கொண்டு இருந்தீர்கள்” என மிகவும் ஆவேசமாக பேசினார்.
அதேபோல், “அதிமுக பிடிக்கவில்லை என்றால் வெளியேறுங்கள், உங்களை நாங்களா இழுத்து பிடித்துக்கொண்டு இருக்கிறோம், நாங்கள் உங்களைப் பிடித்து தொங்கவில்லை” என கூறியுள்ளார்.
ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து கூறிய கருத்து பெரும் அதிருப்தியை அதிமுகவினருக்கு ஏற்படுத்தியது. இதனால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதற்கு தமிழ்நாடு பாஜக தரப்பிலும் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.