Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தனிநபர் பொறுப்பல்ல என்றும், அனைவரும்தான் பொறுப்பு என்றும் அஜித் பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் அஜித்குமார். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது கார் ரேஸிங்கில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில், இவர் தற்போது தனியார் ஆங்கில யூ டியூப் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அதில் பல விஷயங்கள் குறித்து அஜித் பேசினார். அதில் கரூரில் நடந்த கூட்ட நெரிசல் குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது,
கூட்ட நெரிசலுக்கு யார் பொறுப்பு?
தமிழ்நாட்டில் பல விஷயங்கள் நடந்து வருகிறது. கூட்ட நெரிசல் சம்பவம் நடந்துள்ளது. அது தனி ஒரு நபரின் பொறுப்பல்ல. நம் அனைவரும் அதற்கு பொறுப்பு ஆவோம். ஊடகத்திற்கும் இதில் பங்கு உள்ளது. இன்று கூட்டத்தை கூட்டுவதை விரும்புவதாக நினைக்கிறேன். இது முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் போட்டிகளிலும் கூட்டம் வருகிறது. திரையரங்கில் மட்டும் இது நடப்பது ஏன்? பிரபலங்களுக்கு மட்டும் இது நடப்பது ஏன்? இது திரையுலகையே உலகத்திற்கு மோசமாக காட்டும்.
இவ்வாறு அஜித் அதில் பேசியுள்ளார்.
கரூர் துயர சம்பவம்:
அஜித் தனது பேட்டியில் ரசிகர்களுக்கு பல வேண்டுகோள்களை முன்வைத்ததுடன், சில விஷயங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசியலில் கரூர் விவகாரம் அணையா நெருப்பாக மாறியுள்ள நிலையில், விஜய்யின் அரசியல் வாழ்க்கையை இது மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் விஜய் நேரில் சென்று பார்க்கவில்லை என்ற விமர்சனம் எழுந்த நிலையில், அவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் அழைத்து பேசியதும் விமர்சனத்தை எழுப்பியது. இந்த சூழலில், மீண்டும் தனது அரசியல் வாழ்க்கையை திடகாத்திரமாக விஜய் தொடங்க உள்ள சூழலில் அஜித் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு தனி நபர் பொறுப்பாக முடியாது என்று கூறியிருப்பது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தமிழக அரசியலில் தாக்கம்:
அஜித்தின் இந்த கருத்து தமிழக அரசியலில் அதிர்வலையை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்பப்பட்டுள்ள விஜய்க்கு நிகரான ஒரே போட்டி நடிகர் அஜித் ஆவார். தமிழக வெற்றிக் கழகம் அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
அஜித் தனக்கு அரசியலில் வரும் எண்ணம் இல்லை என்று கூறியிருந்தாலும், அவரது ஒவ்வொரு கருத்துக்களும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறி வருகிறது. விஜய்க்கு எதிராக அஜித் ரசிகர்களின் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக அவருக்கு தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை சமீபகாலத்தில் தொடர்ந்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.





















