EPS : கோடநாடு குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி பேட்டி
கோடநாடு கொலைக்கு கொள்ளை விவகாரத்தை கண்டுபிடித்தது அதிமுக அரசாங்கம், வழக்கு போட்டது அதிமுக, குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அதிமுக அவர்களை ஜாமீனில் எடுத்தது திமுக.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில், அ.தி.மு.க. 51வது ஆண்டுவிழா குறித்த ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்னர், நிருபர்களைச் சந்தித்த அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கழக துவக்க விழா பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்றார்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "தமிழகத்தில் 38 தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஏன் 38 பேரும் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோது காவேரி நதிநீர் பிரச்சனையில் நாங்கள் மத்திய அரசோடு கூட்டணியில் இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தொடர்ந்து பல நாட்கள் நாடாளுமன்ற ஆவையை ஒத்திவைக்கும் அளவிற்கு நாங்கள் குரல் கொடுத்தோம்.
ஆனால், இன்றைய ஆட்சியில் உள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் என் குரல் கொடுத்து பணிகளை துரிதமாக நடத்த குரல் கொடுக்கவில்லை? அ.தி.மு.க. இது குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறியுள்ளது என்று கூறினார்.
கோடநாடு கொலைக்கு கொள்ளை விவகாரத்தை கண்டுபிடித்தது அ.தி.மு.க. அரசாங்கம், வழக்கு போட்டது அ.தி.மு.க., குற்றவாளிகளை சிறையில் அடைத்தது அ.தி.மு.க. அவர்களை ஜாமீனில் எடுத்தது தி.மு.க.. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் கொடும் குற்றவாளிகள் என்று கூறினார்.
ஓபிஎஸ் உடன் இணைவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இது அதிமுக பொது குழு கூட்டத்தில் எடுக்க முடிவு, இது தனிப்பட்ட முடிவு அல்ல. எனவே, பொதுக்குழு கூட்டத்தில் 2 ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவின்படி அ.தி.மு.க. செயல்படும் என்றார். ஜேசிடி பிரபாகரன் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், இதுவரை ஜேசிடி பிரபாகரன் கட்சி வேட்டி கூட கட்டவில்லை, அ.தி.மு.க. கட்சி வேட்டி கட்டுபவர்கள் மட்டுமே அ.தி.மு.க. கட்சிக்காரர்கள். வேடந்தாங்கல் பறவை போல சீசனுக்கு கட்சி மாறுபவர் ஜே.சி.டி. பிரபாகரன் என்று கூறினார். 41 ஆயிரம் கோடி எப்படி கொள்ளை அடிக்கப்பட்டது? அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரை "மடியிலே கனமில்லை வெளியிலே பயமில்லை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கோவை செல்வராஜ் கட்சியைப் பற்றி என்ன தெரியும்? யார் யாரெல்லாம் கட்சி மாறி வருகிறார்களோ அவர்களெல்லாம் ஒன்று கூடி பேட்டியளித்து வருகிறார்கள். யார் கோவை செல்வராஜ்? யார் ஜே சி டி பிரபாகரன்? இவர்கள் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். இவர்கள் எல்லாம் எப்போது கட்சிக்கு விசுவாசமாக இருந்தனர். இவர்கள் எல்லாம் கட்சிக்குள் இருந்து குடைச்சல் கொடுப்பவர்கள். ஒரு பயிர் செழிக்க வேண்டும் என்றால் களை எடுக்க வேண்டும். தற்போது அ.தி.மு.க. களை எடுத்துள்ளது என்று கூறினார்.
அப்போது, சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, சுந்தரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோன்மணி, பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், காவேரி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.