Edappadi Palaniswami: திருக்கடையூர் கோயிலில் எடப்பாடி பழனிசாமி பெயரில் சிறப்பு பூஜைகள்
தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அனைத்து வழக்குகளில் இருந்து விடுபட வேண்டி திருக்கடையூர் கோயிலில் அதிமுகவினர் சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான பழமையான தேவாரப் பாடல் பெற்ற அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அப்பர், சுந்தர், சம்பந்தர் ஆகிய மூவரால் தேவாரப்பாடல் பெற்றதும், பக்தர் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தியாக எழுந்தருளி எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புராண நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகப்புகழ்பெற்ற திருத்தலமாக விளங்குகிறது.
அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தலத்தில் ஆயுள் ஹோமம் மற்றும் 60 வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி, 60 வயதில் பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள் சதாபிஷேகம், 90 வயது அடைந்தவர்கள் கனகாபிஷேகம், 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆண்டின் 365 நாட்களும் திருமணம் நடைபெறும் ஓரே தலமாகும்.
இத்தகைய பல்வேறு சிறப்பு வாய்ந்த திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பல்வேறு வழக்குகளில் இருந்து விடுபட வேண்டியும், வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டியும் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில தலைவர் தாடி மா.ராசு தலைமையில் கோயில் மண்டபத்தில் கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் பரிகார பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் பூர்ணாகுதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. மேலும், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்களில் உள்ள புனித நீர் மற்றும் பிரசாதங்களை எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்த பூஜை ஏற்பாடுகளை சுப்ரமணியம் குருக்கள் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து கோயிலை சுற்றி வந்து கள்ள வர்ண விநாயகரை வழிபட்டு விட்டு, ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சன்னதிகளுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் நாகை மண்டல போக்குவரத்து பிரிவு செயலாளர் வெங்கடேசன், மண்டல தலைவர் விஜயகுமார், பொருளாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்