ADMK - BJP: தொகுதிப் பங்கீடு கருத்து; அமித்ஷா பேசுவது ஒன்றும் இறுதி முடிவு கிடையாது - செம்மலை கருத்து
யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை நாங்களே முடிவு செய்வோம் என்று அதிமுக கூறி வரும் நிலையில், அமித்ஷா பேச்சால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Semmalai : யாருக்கு எத்தனை இடங்கள் என்பதை நாங்களே முடிவு செய்வோம் என்று அதிமுக கூறி வரும் நிலையில், அமித்ஷா பேச்சால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமித்ஷா பேச்சால் சர்ச்சை:
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் அதற்கான பணிகளில் பாஜக தீவிரமாக களம் கண்டுள்ளது. அந்த வகையில் பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் ஒரு மாத காலம் நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டமானது இன்று நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர் விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தார். இதனை அடுத்து, சென்னை கோவிலம் பாக்கத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா பேசியது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷா என்ன பேசினார்?
"வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார். காமராஜர், மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமராவதை இழந்துள்ளோம். தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை தமிழகம் இரண்டு முறை தவறவிட்டுள்ளதாகவும், அதற்கு திமுக தான் காரணம் என்றும் அவர் கூறினார். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்க உறுதி எடுப்போம். பாஜக வெற்றிக்கு உழைக்கும்படி" தென் சென்னை தொகுதி பாஜக பொறுப்பாளர்களுக்கு அமித்ஷா அறிவுறுத்தினார்.
பாஜக நெருக்கடிக்கு பணியுமா அதிமுக?
அமித்ஷா பேசியது குறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கூறியதாது, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இப்போதே முடிவு செய்ய முடியாது. 25 தொகுதிகள் இலக்கு என்ற பாஜக கூறுவது இறுதி முடிவாக இருக்காது. தமிழ்நாட்டை பொறுத்தவரை அனைத்து தேர்தலிலும் கூட்டணியில் அதிமுக தான் தலைமை தாங்கும். கூட்டணி பேச்சுவார்த்தையின்போது தமிழ்நாட்டில் எந்த கட்சி செல்வாக்கு மிக்க கட்சியோ, எவ்வளவு மக்கள் ஆதரவு இருக்கிறதோ அதன் அடிப்படையில் தான் தொகுதியில் இடங்கள் ஒதுக்கப்படும். 10 மாத இருக்கும் முன்பே இந்த தொகுதி தான் இவர்களுக்கு என்று பாஜக கூறுவது இறுதி முடிவாக இருக்காது” என்று செம்மலை தெரிவித்துள்ளார்.
மேலும், ”தமிழகத்தில் இருந்து பிரதமர் ஒருவர் உருவானால் மகிழ்ச்சி தான். ஆனால் தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பை தமிழகம் இரண்டு முறை தவறவிட்டுள்ளதாக அமித்ஷா கூறுவது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியல்லை. அதுக்கு திமுக தான் காரணம் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. எனவே தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவானால் அதிமுக மகிழ்ச்சி அடையும். நம்முடைய மாநிலத்தின் வளர்ச்சக்கு உதவும்” என்று முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.