AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!
கட்சியின் விதிகளுக்கு எதிராக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக கூறி, அ.தி.மு.க.வில் இருந்து 15 நபர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக சட்டசபையில் இடம்பிடித்துள்ளது. அந்த கட்சியின் சட்டமன்ற தலைவராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மட்டும் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பிற பொறுப்புகளுககு தேர்வு நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவின் சட்டப்பேரவை துணைத் தலைவராக ஒ.பன்னீர்செல்வமும், கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் பின்வருமாறு:
“ எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் மீது உயிரினும் மேலான அன்பு கொண்ட உடன்பிறப்புகள் தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து, கண்ணை இமை காப்பது போல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை காத்து நிற்கும் காவல் தெய்வங்களாய் இடையறாது பணியாற்றி வருகின்றனர்.
அம்மா மறைவுக்கு பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் புயல் வீசும். அனைத்தும் தகர்ந்து போய்விடும். இனி தமிழ்நாட்டில் குழப்பம்தான் மிஞ்சும் என்று எண்ணி இருந்தோருக்கு ஏமாற்றத்தை பரிசளித்து, எங்கள் ஆட்சி என்றும் மின்னும் இந்த மண்ணிலே என்று மெய்ப்பித்து அவர் அளித்துச் சென்ற ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். இந்த சாதனையை கண்டு நம் எதிரிகளும் வியந்து நின்றனர்.
மாபெரும் கூட்டணி, பல ஆயிரம் கோடி செலவு, பகட்டான வாக்குறுதிகள், பசுந்தோல் போர்த்திய புலிகளாய் பகல் வேஷம் என்ற பரிவாரங்களுடன் வந்து, மக்களிடம் நாடகமாடி தேர்தலை சந்தித்த தி.மு.க. மற்ம் எதிரணி, சட்டமன்ற தேர்தலில் மிகக்குறைந்த வாக்கு சதவீதத்தில்தான் வெற்றி பெற்றிருக்கிறது.
சூழ்ச்சிகள், தந்திரங்கள், சதிச்செயல்கள் அனைத்தையும் முறியடித்து, மக்களின் பேரன்பைப் பெற்று, கழகத்தின் தலைமையிலான கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக கழகத்தின் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக சட்டமன்றத்தில் உரக்கக் குரல் எழுப்பி, உண்மை மக்கள் தொண்டர்களாக பணியாற்ற துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணிகளாகவும், நற்பெயரை அழிக்கும் நச்சுகளாகவும் தங்களை வளப்படுத்திக் கொண்ட சிலர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அபகரித்துவிடலாம் என்று வஞ்சக வலையை நாளும் விரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அரசியிலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்த சசிகலா, இப்போது கழகம் இவ்வளவு வலுவும், பொலிவும், தொண்டர் பெரும்படையும், மக்கள் செல்வாக்கும் பெற்றிருப்பதைப் பார்த்ததும் அரசியலில் முக்கியத்துவத்தை தேடிக்கொள்ள, கழகத்தை அபகரிக்கும் முயற்சியில் இறங்கப்போவதாக ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் சிலருடன் பேசுவதும், அதை ஊரறிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதுமாக வினோதமான ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.
மகத்தான இரு தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தால் புகழ்பெற்றிருக்கும் அ.தி.மு.க. மக்களின் பேரியக்கமாக வரலாற்றில் நிலைபெறுமே தவிர, ஒரு குடும்பத்தின் அபிலாஷைகளுக்காக தன்னை ஒருபோதும் அழித்துக்கொள்ளாது.
அ.தி.மு.க. சட்ட திட்டங்களுக்கு மாறாகவும், இயக்கத்தின் லட்சியங்களுக்கு விரோதமாகவும் செயல்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது தயவு தாட்சன்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி, கழகத்தின் வளர்ச்சிக்கும், புகழுக்கும், இழுக்கும், பழியும் தேடியவர்கள் அனைவரையும் கழகத்தில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இனி அதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும் அவர்கள் அனைவரம் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 15 நபர்களை கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர்.