Sarpatta Parambarai: சார்பட்டா பட விவகாரம் - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ்
மேலும் மிசாவை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கைகளையும் அந்த அறிக்கையின் 575 பக்கங்களிலும் ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை.
சார்பட்டா பரம்பரை தயாரிப்பாளர் இயக்குனர் ரஞ்சித்துக்கும், ஒடிடி தளத்தில் வெளியிட்ட அமேசான் நிறுவனத்திற்கும் அதிமுக சார்பாக வழக்கறிஞர் ஆர்.எம். பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், ‘சமீபத்தில் இயக்குனர் பா. ரஞ்சித் வெளியிட்ட சார்பட்டா பரம்பரை ஒரு வரலாற்று படமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அந்தப்படத்தில் வரலாற்று நிகழ்வுகளை தவறாக மக்களிடத்திலே பரப்புகின்ற விதமாகவும் உண்மைக்கு மாறான விஷயங்களை, வரலாற்றுச் சம்பவங்களில் இல்லாத ஒரு விஷயத்தை யாரையோ ஒரு நபரை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக நடக்காத ஒரு விஷயத்தை எந்த ஒரு அரசு ஆவணமும் இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை சம்பந்தப்பட்ட நபர்களே இதுவரை நிரூபிக்காத ஒரு விஷயத்தை அந்தப்படத்தில் சொல்லியிருக்கிறார். ஒரு வரலாற்று படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடத்திலே பரப்புவது சட்டத்திற்கு புறம்பான விஷயம். இது மக்களிடத்திலேயும் அரசியலிலே உண்மையாக உழைத்து மக்களுக்காக பணி செய்தவர்கள் இடத்திலேயும் தவறான எண்ணத்தையும் செய்தியையும் பரப்புவதாக அமைந்துவிடும்.
1970 ஆம் ஆண்டு கால கட்டங்களில் நடைபெறக்கூடிய கதையாக அந்தப் படம் எடுக்கப்பட்டு இருக்கின்றபோது அப்போது முதலமைச்சராக கருணாநிதி இருந்தார். அந்த படத்தின் ஒரு மணி 45 நிமிடம் 17ஆவது நொடியிலே முதலமைச்சர் மகன் கூட மிசாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தின் அடிப்படையில் அது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆக சித்தரிக்கப்படுகிறது. ஸ்டாலின் 1971ஆம் ஆண்டு மிசா காலங்களிலேயே அவர் கைது செய்யப்பட்டாரே ஒழிய, மிசாவில் அவர் கைது செய்யப்படவில்லை. எனவே இந்த செய்தியானது அரசியல் காரணங்களுக்காக ஸ்டாலினை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக உண்மைக்கு மாறான தகவலை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
இந்த செய்தியின் மூலம் உண்மையாகவே மிசாவின் மூலமாக கைது செய்யப்பட்டவர்களில் மனதில் ஒரு பெரிய வருத்தத்தையும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இந்த சம்பவத்தை பற்றி அறியாதவர்கள் மனநிலையும் வரலாற்றின் பக்கங்களை படித்தவர்கள் மனதில் எழும் ஒரு தவறான செய்தியை கொண்டு சேர்த்து இருப்பதாக நான் அறிகிறேன்.
மேலும் மிசாவை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கைகளையும் அந்த அறிக்கையின் 575 பக்கங்களிலும் ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை.
நீதியரசர் ஷா கமிஷனின் அறிக்கையின்படி ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று பட்டவர்த்தனமாக புலப்படுகிறது. இது சம்பந்தமாக பல விவாதங்களிலேயும், பல அரசியல் தலைவர்களின் கேள்விகளுக்கும் இதுநாள் வரை அதை நிரூபிக்கும் விதமாக அல்லது அதை மறுத்து கூறுகின்ற விதமாக ஸ்டாலின் அவர்களோ அவருடன் சார்ந்தவர்களோ எந்தவிதமான அறிக்கையோ சான்றுகளையாே இது காரும் வரை தெரியப்படுத்தவில்லை.
இதுதொடர்பாக நாளிதழ்களில் செய்தி வந்தபோதும் பல தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்திய போதும் இந்தக் கூற்றை நிரூபிக்கும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து யாருமே ஆதாரங்களை நிரூபிப்பதாக இல்லை. ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கூட ஸ்டாலின், நீதியரசர் ஷா கமிஷன் அறிக்கையை நான் படித்ததில்லை என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு தவறான தகவல்களை ஒரு திரைப்படத்தின் வாயிலாக அதுவும் பீரியட் பிலிம் என்று எடுத்துவிட்டு, கடந்த 40 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கூறிவரும் உண்மைக்குப் புறம்பான ஒரு தகவல்களை உறுதிப்படுத்துகின்றது நீங்கள் எடுத்திருக்கும் இந்தப் படம் அமைந்திருக்கிறது.
இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 505 கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்து தண்டிக்கப்படக் கூடிய குற்றமாக நான் கருதுகிறேன் எனவே இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள்ளாக நீங்கள் சொன்ன அந்த செய்திகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் எந்தவித அடிப்படையும் இல்லாமல் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என்பதை அனைத்து ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகளில் பிரசுரித்து வெளியிட வேண்டும் அல்லது அந்த திரைப்படத்தில் வரக்கூடிய குறிப்பிட்ட அந்த வசனத்தை உடனடியாக நீக்கி மறுவெளியீடு செய்ய வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் உங்களின் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்பை நீங்களே வழங்கி விட்டீர்கள் என்பதாக எடுத்துக்கொண்டு அதற்கான அனைத்து விளைவுகளையும் நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.