AIADMK Upcoming Meeting: பரபரப்பான சூழலில் ஜூலை 9ல் கூடுகிறது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
. பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதால் இந்த கூட்டம் அரசியல் தளத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், வரும் 9ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித்தேர்தல், சசிகலா விவகாரம், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. சசிகலா விவகாரம் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வெளியிடும் ஆடியோவால், தொண்டர்கள் அவரிடம் சென்றுவிடக் கூடாது என்பதில், ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இருவரும் கவனத்துடன் உள்ளனர். மேலும், சட்டப்பேரவை தேர்தலில் அடைந்த தோல்வியில் மீண்டு வர, உள்ளாட்சி தேர்தலில் வென்றால்தான், தொண்டர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தலில் வென்று, அதிமுக பலத்துடனையே இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. பரபரப்பான சூழ்நிலைகளுக்கு இடையே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதால் இந்த கூட்டம் அரசியல் தளத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா விடுதலை ஆன பின் தி.நகரில் உள்ள இல்லத்தில் இருந்து அறிக்கைகளையும் முக்கிய நபர்களின் சந்திப்புகளையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் அம்மா ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக தான் அரசியலில் இருந்து விலகி கொள்வதாக அறிக்கை மூலம் அறிவித்த நிலையில் தேர்தலில் அதிமுக தோல்விக்கு பிறகு அதிமுக தொண்டர்களிடம் தொலைபேசியில் பேசி அதனை ஆடியோவாக வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஓபிஎஸும் ஈபிஎஸும் கட்சிக்குள் சண்டை போட்டுக் கொள்வது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், நாங்கள் எல்லாம் வளர்த்தக் கட்சி கண்முன்னே சிதைவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் சசிகலா பேசி இருந்தார்.
இதுவரை ஐம்பதிற்கு மேற்பட்ட தொண்டகளிடம் பேசி சசிகலா ஆடியோ வெளியிட்டிருந்த நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்து முடிந்த பின்பு சசிகலாவுடன் தொலைபேசி வாயிலாக பேசியவர்கள் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலா ஆடியோ ஒருபுறம், கட்சி நிர்வாகிகள் நீக்கம் மறுபுறம் என சூடுபிடிக்கும் அரசியல் களத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கவிருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.