OPS: தலைவர்களுக்கு முன்பே தொண்டர்கள் இணைந்தனர்..மக்களின் நிலைப்பாடு இதுதான்.. ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அனைவரும் ஓண்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
எம்.எல்.ஏ. ஐயப்பன் சந்திப்பு:
சென்னையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐயப்பன் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓபிஎஸ், அதிமுக ஒன்றாக இருக்கும் வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
மேலும் பேசிய ஓபிஎஸ், எங்களின் எண்ணம், செயல் எல்லாம் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே. இதுவே அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடாக உள்ளது. பொதுக்குழு என்ற பெயரில் நடத்தப்பட்ட நாடகத்தால், தொண்டர்கள் அனைவரும் தற்போது ஒன்றாக இணைய வேண்டும் என்று, ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின், கட்சி இரண்டாக பிளவுப்பட்டது. அப்போது தேர்தலை சந்தித்து தோல்வியுற்றோம். அதனை தொடர்ந்து கட்சி நிலையை கருத்தில் கொண்டு தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தனர்.
தொண்டர்கள் இணைய வேண்டும்
அதேபோன்றுதான், தற்போதும் தொண்டர்கள் இணைய வேண்டும் என தெரிவித்து இணைந்து வருகின்றனர். மேலும், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்டந்தோறும் பேரணிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுக்குழு செல்லாது என நீதிமன்றம் தெரிவித்ததை தொடர்ந்து, முன்பிருந்த நிலை தொடரும் என உத்தரவு தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, பேசிய ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கும் எனக்கும் இருந்த பிரச்சனையால் அதிமுகவின் 1.30 கோடி தொண்டர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது. அதிமுக தொண்டர்கள் அனைவரும் நாங்கள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற ஒருமித்த கருத்தோடு இருக்கிறார்கள். பல பகுதிகளில் இருந்து அந்த செய்திகள் எங்களுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். அதன் காரணமாக இதற்கு முன்னாள் ஏற்பட்ட அனைத்து கசப்பான விஷயங்களை மறந்து மீண்டும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஆனால், ஒன்றிணைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பலரும் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இயக்குநர் பாக்யராஜ் , ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram