ADMK OPS : பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ள ஓ.பி.எஸ்..! எடப்பாடிக்கு செக் வைக்க திட்டமா..?
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகாரமாக வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி நிகழ்ந்த பரபரப்பான சம்பவங்களைத் தொடர்ந்து நேற்று மாலையே கட்சியில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். டெல்லியில் குடியரசுத் தலைவர் வேட்புமனுத்தாக்கலில் பங்கேற்க சென்றதாக விளக்கம் அளித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை இந்திய தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் ஜூலை 11-ந் தேதி மீண்டும் கூட உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேச ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் அலுவலகத்தில் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது காவிரி நதிநீர் பிரச்சினை, மேகதாது அணை விவகாரம் குறித்து பேச உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கூறியுள்ளனர்.
அதேசமயத்தில், அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் குறித்தும், ஒற்றைத்தலைமை விவகாரம் குறித்தும், எடப்பாடி பழனிசாமியுடனான மோதல் குறித்தும், பொதுக்குழு விவகாரம் குறித்தும் ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்திப்பதற்கு இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை. மகாராஷ்ட்ரா அரசியல் விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்கள் பெரும்பாலோனார் அதில் கவனம் செலுத்தி வருகின்றனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பலரும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலிலே, பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ள அதே சமயத்தில், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால், அ.தி.மு.க. அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அனைவரும் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமியை நாளைய தலைவர் என்றும் புகழாரம் சூட்டியும் பேசினர். தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாகவும், அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்ததாலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து பாதியிலே வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுக்குழு கூட்டம் நிறைவு பெற்ற பிறகு தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆகியோர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தனித்தனியே சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Two Thousand Rupee : 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுகிறதா ரிசர்வ் வங்கி? என்ன காரணம்? அறிக்கை சொல்வது என்ன?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்