ADMK Jayakumar: மதுரை நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை சூட்டியிருக்கலாமே? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ளதால், அதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ளதால், அதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது,
"தமிழ்நாட்டில் ஒரே விஷயம் தான் நடந்துகொண்டுள்ளது. கருணாநிதிக்கு சிலைவைப்பதும், கருணாநிதிக்கு புகழ் பாடுவதும் தான் தற்போது நடைபெற்று வருகிறது. இது மக்களுக்கு முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. ஓமந்தூரர் மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிலை, கிண்டி மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிலை, மதுரை நூலகத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்துள்ளார். மதுரை நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரில் யாராவது பெயரை வைத்திருக்கலாம். தமிழ்நாட்டை சூரையாடி தமிழ்நாடு முழுவதும் கொள்ளையடித்து தனது குடும்பம் மட்டும் வளம் பெறவேண்டும் என செயல்படுவதையே அத்தியாவசியமாக கொண்டுள்ளார்.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகள் அடிப்படை கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது மதுரையில் நூலகம் திறந்தார்கள். நூலகம் என்பது நல்லவிசயமாக இருந்தாலும் அதற்கு ஏன் அவரது தந்தையின் பெயரைச் சூட்ட வேண்டும். உலகிற்கு பொதுமறை கொடுத்த வள்ளுவரின் பெயரைச் சூட்டி இருக்கலாமே. அரசுப் பணத்தில் கருணாநிதிக்கு சிலை வைத்துக்கொண்டுள்ளார். அதேபோல் அவரது நினைவிடத்திற்கு 38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திரும்பவும் கடலில் நினைவுச் சின்னம் வைக்க 81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 81 கோடி ரூபாயை கடலில் கொட்ட வேண்டுமா? அந்த பணத்தை எவ்வளவோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கலாம். அடிப்படை கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கலாம். வட சென்னைக்கு நிதி ஒதுக்கலாம். அதேபோல் கிராமங்கள் மேம்பாடு அடைய நிதி ஒதுக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் பணமில்லை கருணாநிதியின் புகழ் பாட மட்டும் பணம் இருக்கிறதா? திமுக பாராளுமன்ற உறுப்பினர் வில்சன் நீதிமன்றத்தில் வாதிடும்போது கடலில் சிலை வைக்கவில்லை எனக் கூறிவிட்டு, இப்போது இவ்வாறு நடந்து கொள்வது எவ்வகையில் நியாயம்.
தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் யார் கலந்துகொள்ளவுள்ளனர் என விரைவில் தெரிவிக்கப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனை எதிர்கொள்ள எகிப்தில் இருந்து வெங்காயம் கொண்டுவர ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது" எனத் தெரிவித்தார்