“சும்மா இல்ல... கருணாநிதியின் சூழ்ச்சிகளை 2 பெண்கள் முறியடித்தோம்” - சிவி சண்முகம் ஏரியாவில் கெத்து காட்டிய சசிகலா!
அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று ஒன்றை மட்டும் சொல்கிறேன். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை
2 பெண்கள் தான் கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவை நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டினோம் என சசிகலா தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை காலம் முடிவடைந்து கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்ட சசிகலா 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தீவிர அரசியலில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அவர் அறிவித்திருந்தார். சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் ஆகியவற்றில் அதிமுக படுதோல்வியடையவே மீண்டும் அரசியல் பிரவேசம் எப்போது இருக்கும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப சமீப காலமாக அவர் தீவிர அரசியல் ஈடுபடுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் தொண்டர்களை சந்திப்பதும், அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுமாக அவர் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் சிவி சண்முகம் தீவிர விசுவாசியாக இருந்த முகமது ஷெரீப் மகள் திருமண விழாவில் சசிகலா கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் தனது பேட்டியில் தமிழகம் முழுவதும் ரவுடிகள் சாலையோரம் உள்ள கடைகளில் கட்டாயம் பணம் வசூல் செய்து வருகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டு உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் திமுக அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வருகிறது.
திமுகவினர் திராவிட மாடல் என கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை எனக்கு திராவிட மாடல் என்றால் எனக்கு ஒன்றும் புரிய வில்லை எனவும், மேலும் 400க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுகவினர் செயல்படுவதாக கூறி வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் திமுகவினர் அராஜகங்கள் அதிகரித்து வருகின்றன.
அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று ஒன்றை மட்டும் சொல்கிறேன். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாகவோ அல்லது திமுகவினருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாக இருக்கக்கூடியவர்களாக இருக்கக்கூடும். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடினால் கட்சியை காப்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர இருப்பவர்களை விரட்டியடித்து கட்சியை பலவீனப்படுத்த மாட்டார்கள். இதுபோன்ற ஒருசிலரை பார்க்கையில், கட்சிக்கு எதிரான திட்டங்களை மனிதில் வைத்து செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவர்களின் எண்ணம் என்றைக்கும் ஈடேறாது என்பதை இந்த கட்சியில் 38 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தமிழச்சியாக உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள் தான் மீண்டும் ஏற்பட்டு இருக்கிறது. அன்று இரண்டே பெண்கள் கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டினோம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை புறம்தள்ளிவிட்டு உங்கள் நேரத்தை கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலம் நம்முடையதே. நாளை நமதே" என்றார்.