ADMK: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால், முடிவுகளை அறிவிக்க தடை விதித்தது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், "கட்சி விதிகளுக்கு எதிராக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது" என வழக்கு தொடர்ந்தார்.
ஓபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம்:
இந்நிலையில், இன்றைய விசாரணையில், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வாதம் முன்வைத்தது. "பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாத வகையில் நிபந்தனைகளை விதித்து விதிகளை திருத்தியுள்ளனர். நிபந்தனைகளை நீக்கினால் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார்.
பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற தயார்:
பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதற்கு முன் கட்சியினரிடம் கருத்து கேட்கப்படவில்லை. கட்சியின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டு பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும். நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை வாபஸ் பெற தயார்" என ஓபிஎஸ் தரப்பு வாதிட்டுள்ளது.
தொடர்ந்து வாதிட்ட ஓபிஎஸ் தரப்பு, "எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்குவதற்காகவே என்னை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். திமுகவுடன் நெருக்கம் காட்டியதாக எளிமையான காரணம் கூறி நீக்கியுள்ளனர். ஜனநாயகத்தின் முக்கிய கட்டமைப்பு அரசியல் கட்சி.
உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக் கூறுவதற்கு, அரசியல் கட்சிகள் சங்கங்களோ, கிளப்களோ அல்ல. கட்சியில் எந்த விதிகள் திருத்தப்பட்டாலும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டு, அங்கீகாரம் பெற வேண்டும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறும் எதிர் தரப்பினர், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களை மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக நினைத்த அனைத்தையும் செய்து விட முடியாது. பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர முயற்சி:
அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மோதல் உச்சத்திற்கு சென்ற நிலையில், கடந்த மாதம் பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி, எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தது முதல் அவரை பொதுச்செயலாளர் ஆக்க அவரது தரப்பினர் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.