"மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி" புகழ்ந்து தள்ளிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!
மு.க.ஸ்டாலின் ஒரு கடினமான உழைப்பாளி என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகழாரம் சூடியுள்ளார்.
ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும், எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையிலும் அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜேந்திர பாலாஜி. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் இவர் அளித்த பேட்டி பலவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மு.க.ஸ்டாலின் கடின உழைப்பாளி:
இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ மு.க.ஸ்டாலின் ஒரு கடினமான உழைப்பாளி. அது எனக்கு பிடிச்ச விஷயம். உடல் சரியில்லாத நேரத்தில் மருத்துவர்கள் கூறியும் அதையும் மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தன்னை முன்னிலைப்படுத்தி ஜெயித்துள்ளார். அதுவும் அவர் உழைப்பில்.
டெல்லிக்கு அடிமையாக தமிழக மக்கள் இருக்க விரும்பவில்லை. நம்மை ஆளப்போகிறவர்களும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும், தமிழனாக இருக்க வேண்டும். டெல்லி நினைத்தால் ஒருவனை உருவாக்கும். அதே ஆளை அழித்துவிடும். அதனால் டெல்லி தேசிய அரசியலை தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை. அதற்கு காரணம் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், அம்மா ( ஜெயலலிதா)
மூன்றெழுத்து மந்திரம் இபிஎஸ்:
பகுத்தறிவு, நாவன்மை பேசக்கூடிய திறமை, திராவிட சித்தாந்தம் நம்மை ஆள வேண்டும். நாமே ஆள வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளது. இதனால், டெல்லி தலைமை வருவதை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்த மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர்., அம்மா, இபிஎஸ். இன்னும் பல பேர் வந்தால்தான் உச்சரிக்க முடியும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், அவரிடம் அப்போது காரில் அமைச்சராக சென்று கொண்டிருந்தபோது திடீரென பதவியில் இருந்து நீக்கிவிட்டார்கள் என்று தகவல் வரும். நம்மைப் பற்றி யாராவது கூறிவிடுவார்களா? என்றோ அமைச்சரவை மாற்றம் என்ற தகவல் வரும், அப்படி பயந்து பயந்து இருந்த தருணம் எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராஜேந்திர பாலாஜி, அப்படி ஒரு தருணம் எனக்கு வரவில்லை. அதுனால அந்த தருணம் எப்படி இருக்கும் என்று தெரியாது என்றார்.
அமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் ராஜேந்திர பாலாஜி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். பா.ஜ.க.வுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நெருக்கமாக செயல்பட்டபோது இவர் மோடிதான் எங்கள் டாடி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சட்டமன்ற தேர்தலில் ராஜேந்திர பாலாஜி மோசமான தோல்வியைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.