TVK Maanadu: கொளுத்தும் வெயில்! த.வெ.க. மாநாட்டுத் திடலில் மயக்கம் போட்டு விழும் தொண்டர்கள்!
Vijay TVK Maanadu: தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பங்கேற்க வந்த தொண்டர்கள் பலரும் மாநாட்டுத் திடலில் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதலே எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடக்கிறது.
த.வெ.க. மாநாட்டில் தொண்டர்கள் மயக்கம்:
விஜய்யின் இந்த முதல் அரசியல் மாநாடு இன்று மாலை 6 மணிக்குத் தொடங்க உள்ள நிலையில், நேற்று இரவு முதலே விஜய்யின் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவியத் தொடங்கினர். மாநாட்டில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளதால் அதற்காக இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
மேடையின் அருகில் இருந்து விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நாற்காலிகளை பிடித்து அமர்ந்துள்ளனர். மாநாட்டுத் திடல் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருப்பதால் தற்போது வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயில் வாட்டி வதைத்து வருவதால் மாநாட்டைப் பார்க்க வந்த பலருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் 80க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
முதலுதவியில் த.வெ.க. மருத்துவ குழு:
காலை முதலே மாநாட்டுத் திடலில் பலரும் சாப்பிடாமல் வந்திருப்பதாலும் அவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. மாநாட்டுத் திடலில் ஏராளமான தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநாடு மாலையே தொடங்கும் என்பதால் தண்ணீர் தற்போதுதான் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால், காலை முதலே தொண்டர்கள் குவிந்ததால் தண்ணீர் இன்றி வெயிலில் வாடி பல தொண்டர்கள் மயக்கம் அடைந்தனர்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் தொண்டர்கள் பலரும் மாநாட்டிற்காக வைக்கப்பட்டுள்ள நாற்காலியை தலைமீது வைத்துக் கொண்டு அமர்ந்துள்ளனர். சிலர் மாநாட்டுத் திடலின் மேடைக்கு கீழே அமர்ந்துள்ளனர். மாநாட்டுத் திடலில் 350 மருத்துவர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் முதலுதவிக்காக தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் மயக்கம் அடைந்த த.வெ.க.தொண்டர்களுக்கு முதலுதவி அளித்து வருகின்றனர். அதிகாலை முதலே தொண்டர்கள் குவிந்ததால் அவர்கள் தண்ணீர், உணவின்றி தவிப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து, த.வெ.க. நிர்வாகிகள் மாநாட்டிற்கு வந்துள்ள தொண்டர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் பாட்டில்களை விநியோகித்து வருகின்றனர்.
தண்ணீர், பிஸ்கட் விநியோகம்:
மேலும், த.வெ.க. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு முதலுதவி மற்றும் அவசர சிகிச்சை வழங்குவதற்காக ஏராளமான ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதுடன் அவசரப் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வருபவர்களுக்காக மாநாடு நடக்கும் வழித்தடத்தில் பலரும் இலவசமாக உணவுகளை விநியோகித்து வருகின்றனர். மேலும், மாநாட்டுத் திடலிலும் பல இடங்களில் கடைகள் உள்ளது. ஆனாலும், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகளவு காணப்படுவதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் மாநாட்டு நிர்வாகிகளும், போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.