Thaadi Balaji: விஜய் கட்சியே வேண்டாம்.. மரியாதையே இல்ல.. சேரும் முன்பே விலகிய பிரபல நடிகர்!
விஜயை சுற்றி இருக்கும் இரண்டாம் கட்ட நபர்கள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. மதிக்கவும் இல்லை. அவர்கள் சரியில்லாததால் கட்சிக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது என தாடி பாலாஜி விமர்சித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக திகழும் தாடி பாலாஜி லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். முன்னதாக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் விசுவாசியாக திகழ்ந்த நிலையில் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
தவெகவும்.. தாடி பாலாஜியும்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் தவெக-வில் பிரபல துணை நடிகர் சௌந்தரராஜன் செயல்பட்டு வருகிறார். அதேபோல் நடிகை ஷனம் ஷெட்டி விஜய் ஆதரவாளராக உள்ளார். இப்படியான நிலையில் நடிகர் தாடி பாலாஜியும் தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
ஆனால் அவர் முறைப்படி தன்னை கட்சியில் இணைத்துக் கொள்ளவில்லை. மேலும் விஜய் கட்சி தொடங்கிய பிறகு அவரின் புகைப்படத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக் கொண்டார். தான் பதவியை எதிர்பார்த்து இப்படியெல்லாம் செய்யவில்லை என கூறினாலும் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக பேசியும், செயல்பட்டும் வந்தார். தவெக தொண்டர்களும் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் தாடி பாலாஜியை சிறப்பு விருந்தினராக பங்கேற்க செய்தனர்.
அந்த கட்சியே வேண்டாம்
இப்படியான நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக உள்ள ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரான, லாட்டரி அதிபர் கோவை மாவட்டத்தின் மகனான, சார்லஸ் மார்ட்டின் சமீபத்தில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற புதிய அரசியலமைப்பை தொடங்கினார் இந்த கட்சியில் தாடி பாலாஜி தற்போது இணைந்துள்ளார். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த அவர் விஜய் கட்சி தொடங்கிய போது அக்கட்சிக்கு ஆதரவாக பேசினார்.லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்த தாடி பாலாஜி ஊடகத்தினரிடம் தான் இணைந்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
தவெகவில் மரியாதையே இல்ல
அதில், “மரியாதை எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்வதுதான் மனித இயல்பு. நானும் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது?. விஜய் கட்சி தொடங்கிய போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் அவர் கூப்பிடாமல் பல வேலைகளை செய்தேன். அவரின் பெயரை பச்சை குத்திக் கொண்டேன். இது எதுவும் பதவியை எதிர்பார்த்து செய்யவில்லை. ஒரு நல்ல நோக்கத்துடன் அவர் பயணத்தை தொடங்கிய போது நான் அதற்கு அணில் மாதிரி உதவ நினைத்தேன்.
ஆனால் அது முடியவில்லை. விஜயை சுற்றி இருக்கும் இரண்டாம் கட்ட நபர்கள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. மதிக்கவும் இல்லை. அவர்கள் சரியில்லாததால் கட்சிக்கு பல பிரச்சனைகள் உண்டாகிறது. விஜயை ஒரே ஒருமுறை 10 நிமிடம் சந்திக்க வாய்ப்பு கிடைத்து இருந்தால் கூட என் மனதில் இருந்ததை சொல்லி இருப்பேன், ஆனால் அது முடியவில்லை. பிறகு தான் எஅவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயை பார்க்க வேண்டும் என நினைத்தால் கூட இதுதான் நிலைமை என்று புரிந்தது.
அதனால் முயற்சியை கைவிட்டு விட்டேன். இந்த நிலையில்தான் எதேச்சையாக ஜோஸ் சார்லஸை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் சந்திப்பிலேயே வாங்க நம்ம சேர்ந்து செயல்படலாம் என வாஞ்சையோடு கூப்பிட்டார். அவர் வரவேற்ற விதம் பிடித்திருந்தது . அதனால் லட்சிய ஜனநாயக கட்சியில் சேர்ந்து விட்டேன்” என தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.





















