அண்ணாமலை மீண்டும் ஓபிஎஸ்-ஐ முன்னாள் முதல்வர் என்று குறிப்பிட்டால் நடவடிக்கை எடுப்போம் - பெங்களூரு புகழேந்தி
அண்ணாமலை மீண்டும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஐ முன்னாள் முதல்வர் என்றும் குறிப்பிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.
சேலத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் கொடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் அமமுக ஆதரவோடு நடந்து முடிந்தது. இந்தப் போராட்டமானது வரலாறு சிறப்புமிக்க போராட்டமாக அமைந்தது. புரட்சித்தலைவி அம்மா வாழ்ந்த இடத்தில் கொலை கொள்ளை நடந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் 90 நாட்களில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் எனக் கூறியிருந்தார். தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் கோரிக்கையாக வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். கொடநாடு வழக்கில் தொடர் கொலைகள் சயான் குடும்பத்தினரின் விபத்து, கனகராஜ் இறந்தது, தினேஷ் தூக்கில் தொங்கியது, ஓம் பகதூர் கொல்லப்பட்டது மற்றொரு பகதூர் காணாமல் போனது போன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளது. அத்தனைக்கும் விடை காண வேண்டும் என்று தான் நாங்கள் போராட்டம் நடத்தினோம். போராட்டம் நடத்தியது மட்டுமல்லாமல் அதில் மாபெரும் வெற்றியை கண்டிருக்கிறோம். போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடநாடு எஸ்டேட் ஜெயலலிதாவின் எஸ்டேட் இல்லை. அது தனியார் உடையது என்று கூறியிருக்கிறார். ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த சொத்து விவரப்பட்டியலில் பல ஏக்கர் நிலங்களும் அடங்கும். அதில் ஒன்று கொடநாடு எஸ்டேட். ஆனால் ஜெயக்குமார் ஒன்றும் தெரியாமல் பேசி வருகிறார். அதிமுகவில் இருக்கும் ஒருவர் 234 தொகுதிகளிலும் எப்படியாவது டெபாசிட் இழக்க செய்து மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதேபோன்று அமித்ஷாவை மேடையில் அமர வைத்துக் கொண்டு உதயகுமார் மூன்றாவது முறையாக மோடியை முதல்வராக்குவோம் என்று கூறுகிறார். இதன் மூலம் 2024 மோடிக்கு பிரதமர் பதவி போய்விடும் என்று உதயகுமார் குறிப்பிடுகிறார்.
இதேபோன்று அண்ணாமலை பேசுகிறார் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுக கூட்டணியில் இருக்கிறார்கள் என்று கூறினார். ஆனால் என்டிஏ கூட்டம் நடந்தபோது ஓபிஎஸ் இவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே அன்புடன் உங்களது கூட்டணி முடிந்து விட்டது. "தாய்ப்பகை குட்டி உறவு" என்பது வேண்டாம். மறுநாள் நடந்த குளிர்கால கூட்டத் தொடரின் இப்போது ஃப்ளோர் லீடர் ரவீந்திரநாத்தை அழைக்கிறீர்கள். உங்களை நம்பி நாங்கள் இல்லை. நீங்கள் மதித்தால் மதிப்போம், மிதித்தால் மிதிப்போம் என்ற கொள்கையை கொண்டவர் எங்கள் அண்ணன் ஓபிஎஸ். அண்ணாமலை பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு வருகிறார். ஆனால் ஓபிஎஸ்-ஐ ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடுவது இல்லை. அண்ணாமலை மீண்டும் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் என்றும், ஓபிஎஸ்-ஐ முன்னாள் முதல்வர் என்றும் குறிப்பிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என்று யார் குறிப்பிடவில்லை என்றாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது குறித்த கேள்விக்கு, போராட்டம் நடத்தும் போது இதுபோன்று இருக்கிறது. எனவே தனிப்பட்ட விவகாரத்தில் புகழேந்தி தலையிடுவது இல்லை என தெரிவித்தார்.