VCK: திருமாவிற்கு அடுத்து ஆதவ் அர்ஜூனாவா? ஆதங்கத்தில் விசிக மூத்த தலைவர்கள்!
விசிக-வில் சமீபகால சர்ச்சைக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகளால் கட்சியில் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதிதாக கட்சிக்கு வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு எடுத்த எடுப்பிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி, அனைத்து மேடைகளிலும் இடம், அனைத்து முடிவுகளையும் அவரிடம் ஆலோசித்து எடுப்பது என்று முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சிலர் திருமாவளவனிடம் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆதவ் அர்ஜூனாவிற்கு எதிராக ஆதங்கம்:
இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் சிலரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் திருமாவளவனுக்கு அடுத்தபடியாக நான் தான் என்ற பிம்பத்தை ஆதவ் அர்ஜுனா கட்டி எழுப்ப முயல்வதாகவும், இது ஒரு கட்டத்தில் விசிக-விற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே நிர்வாகிகள் திருமாவளவனை சந்தித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
திமுகவுக்கு ஒரு காலகட்டத்தில் தேர்தல் பணியாற்றிய ஆதவ் அர்ஜுனா, அங்கே தனக்கு பெரிய எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்தே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வந்தார். இந்நிலையில் கட்சியின் இணைந்த போது திருமாவளவனிடம் ஒரே வருடத்தில் தன்னால் 2 லட்சம் தொண்டர்களை சேர்க்க முடியும், கட்சியை இப்படியெல்லாம் வளர்க்க முடியும் என்று பல்வேறு பிரம்மாண்ட திட்டங்களை தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரம்:
அதனால் தன்னிடம் உள்ள பண பலத்தை வைத்துக்கொண்டு, விசிக நிகழ்ச்சிகளுக்கு பணத்தை வாரி இறைக்கும் அவர், தொண்டர்கள் மத்தியில் தான் அனைத்தையும் செய்வதாக காட்டிக் கொள்கிறார். மேலும் எங்கு போஸ்டர் வைத்தாலும் அதில் தன்னுடைய படம் இடம்பெற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளை வலியுறுத்துகிறார்.
குறிப்பாக இன்னும் எத்தனை காலம் இப்படியே இருப்பது, விசிக வளர வேண்டும் என்றால் ஆட்சி அதிகாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும் என்று தொண்டர்களை உசுப்பேத்தி விடுகிறார். இது அனைத்தையும் திருமாவளவனிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம், அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று நிர்வாகிகள் சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்ட முழுமையான தகவல்களை இந்த வீடியோவில் காணலாம்..