2026 சட்டமன்ற தேர்தல் ; அதிமுக - பா.ஜ.க 56 தொகுதி பங்கீடு ? 3 அமைச்சர் பதவியா ?
வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பா.ஜ.க 56 தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் , 3 அமைச்சர் பதவி கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

2026 சட்டமன்ற தேர்தல்
தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் பரபரப்பான வியூகங்களுடன் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. ஆட்சியை தக்க வைப்பதற்க திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக கூட்டணியும் முட்டி மோதி வருகின்றன.
இந்நிலையில் , அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பிரதமர் மோடி தமிழகம் வருகை - கூட்டணி முடிவு
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழ்நாடு அரசியல் நிலவரத்தை கண்காணித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித்ஷா தமிழ்நாடு வந்திருந்தார். அவரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திருச்சி தனியார் ஹோட்டலில் சந்தித்து பேசினர். இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்றார்.
அங்கு அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியை பலப்படுத்துவது, அதிமுக உள்கட்சி பிரச்சனை, பிரிந்தவர்களை இணைப்பது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இறுதியில் தமிழ்நாடு வருகை புரியவுள்ளார். அதற்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்ய தேசிய ஜனநாயக கூட்டணி திட்டமிட்டுள்ளது.
பிரிந்தவர்களை அதிமுகவில் இணைக்க முயற்சி
இதனால் தான் டெல்லி செல்வதற்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பாமக கூட்டணியை உறுதி செய்தார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோருக்கான கதவுகளை மூடிய எடப்பாடி பழனிசாமி, தேமுதிக மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் இணைப்பதற்கு முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமமுக பொதுச் செயலாளர் தினகரன் டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
அதே நேரத்தில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுகவிடம் 56 தொகுதிகள் மற்றும் 3 அமைச்சர் பதவி பாஜக கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;
சென்னையில் இம்மாத இறுதியில் பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி ஆலோசனை நடத்தினோம்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. பா.ஜ.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
எத்தனை தொகுதிகளில் பா.ஜ.க. போட்டியிட விருப்பம், போட்டியிட விருப்பமான தொகுதிகள், அமைச்சரவையில் பங்கா ? போன்ற செய்தியாளர்களின் கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்தார்





















