(Source: ECI/ABP News/ABP Majha)
AIADMK: அண்ணாமலையின் விமர்சன எதிரொலி: ”பா.ஜ.க. கூட்டணியில் தொடர 100 சதவீதம் விருப்பம் இல்லை” - அ.தி.மு.க. தொண்டர்கள் ஆவேசம்..!
AIADMK: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு அதிமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
கடும் அதிருப்தியில் அ.தி.மு.க.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டி, அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்த, அதிமுக தலைமை சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கண்டனத்தினை தெரிவித்திருந்தார். அதற்கு தமிழ்நாடு பாஜக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளார்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு வந்த அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தங்களது எதிர்ப்பினையும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.
தொண்டர்கள் ஆதங்கம்:
அதிமுக பெண் தொண்டர் ஒருவர், எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. தலைமைக்கு கட்டுப்பாட்டு அமைதியாக இருக்கிறோம், தலைமையில் இருந்து கண் அசைத்தால் அண்ணாமலையின் வீட்டை மகளிர் அணி சார்பில் முற்றுகையிடுவோம். அதிமுகவைச் சீண்டுவதால் பாஜகவில் உயர் பொறுப்பு கிடைக்கும் என அண்ணாமலை நினைக்கிறார். அதிமுக 1973இல் தொடங்கப்பட்ட கட்சி குறித்து விமர்சிக்க நேற்று வந்த அண்ணாமலைக்கு தகுதி இல்லை. அவரை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள், இல்லையென்றால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கூறியுள்ளார்.
அதேபோல், அதிமுக ஆண் தொண்டர் ஒருவர், எங்கள் தலைவரைப் பற்றி பேசிய பாஜகவுடன் கூட்டணியில் தொடர 100 சதவீதம் நாங்கள் விரும்பவில்லை. எங்கள் தலைவர்களும் அப்படியான முடிவைத்தான் எடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து அதிமுக மூத்த தலைவர்கள் தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை தங்களது கண்டனத்தினை தெரிவித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் தனது கருத்தினை தெரிவிக்காமல் இருப்பது தொண்டர்கள் மத்தியில் ஆதங்கத்தையும் அரசியல் வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கருத்து மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.