மக்களுக்குக் கிடைத்த அதிகாரம்! கிராமங்களின் முகச்சாயலை மாற்றப் போகும் 'TN VETRI' திட்டம்!
கிராமப்புற மக்களின் நேரடி பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்களை தேர்வு செய்யும் 'TN VETRI' திட்டம் மயிலாடுதுறையில் தொடங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் நேரடி பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தேர்வு செய்யும் 'டிஎன் வெற்றி' திட்டத்தின் மாதிரி முன்னெடுப்பு மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
கிராமப்புறங்களின் கட்டமைப்பை மேம்படுத்தவும், மக்களின் உண்மையான தேவைகளை அறிந்து அவற்றைச் செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசால் 'டிஎன் வெற்றி' (TN VETRI - Tamil Nadu Village Empowerment Transformation and Rejuvenation Initiative) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக அரசால் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை அதிகாரிகளே திட்டமிடும் நடைமுறைக்கு மாற்றாக, கிராமப்புற பொதுமக்களின் நேரடி கருத்துக்களுக்கும் கோரிக்கைகளுக்கும் முதன்மை முக்கியத்துவம் அளிப்பதே இந்தத் திட்டத்தின் தனிச்சிறப்பாகும்.
இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் முன்வைக்கும் முன்னுரிமைக் கோரிக்கைகள் அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு, நிதியுதவி ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும்.
மன்னம்பந்தல் ஊராட்சியில் மாதிரித் திட்ட ஆய்வு
இத்திட்டத்தின் முதல்கட்டமாக, ஊராட்சிகளுக்கு உட்பட்ட ஒவ்வொரு சிற்றூரிலும் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து தங்கள் பகுதிக்கான 'சமூக வரைபடத்தை' வரைந்து, அதில் அத்தியாவசியத் தேவைகளைக் குறிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மன்னம்பந்தல் ஊராட்சியில் அமைந்துள்ள மூங்கில் தோட்டம் கிராமத்தில் மாதிரி திட்டமிடல் பணிகள் நடைபெற்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ள இப்பகுதியில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் வரைபடக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் வரையப்பட்ட சமூக வரைபடத்தின் மூலம் தேவைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர்.
மக்களின் கோரிக்கைகளும் ஆட்சியரின் உடனடி நடவடிக்கையும்
ஆட்சியரிடம் நேரடியாக உரையாடிய மூங்கில் தோட்டம் கிராம பொதுமக்கள், தங்கள் பகுதிக்குத் தேவையான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, அங்கன்வாடி மையம் மற்றும் தரமான சிமெண்ட் சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை முதன்மைப் பணிகளாகச் சுட்டிக்காட்டி கோரிக்கை விடுத்தனர். அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள அரசு நிலப்பகுதி தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை பொதுமக்கள் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
உடனடியாக அந்தப் இடத்திற்குச் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மீட்டெடுக்கப்படும் அந்த இடத்தில் கிராமக் குழந்தைகளின் நலனுக்காகப் புதிய அங்கன்வாடி மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் ஆணையிட்டார்.
மாவட்ட முழுமைக்குமான 10 நாள் சிறப்புத் திட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்தகைய மக்கள் பங்களிப்புடனான திட்டமிடல் பணிகள் வரும் அக்டோபர் 7-ஆம் தேதி முதல் அக்டோபர் 17-ஆம் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. இந்த 10 நாட்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடி சமூக வரைபடம் வரைந்து, தங்கள் ஊருக்கான முக்கிய வளர்ச்சிப் பணிகளைத் தேர்வு செய்யவுள்ளனர். மன்னம்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற இந்த மாதிரி திட்டமிடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவித் திட்ட அலுவலர் சங்கர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Before You Go
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















