கோடை வெயிலில் பயிர்களைக் காப்பது எப்படி? - சொட்டுநீர் பாசனம் முதல் மூடாக்கு வரை ஆட்சியர் அசத்தல் ஐடியாக்கள்..!
தமிழ்நாட்டில் தீவிரமடையும் வெப்ப அலையில் இருந்து விவசாயத்தைப் பாதுகாப்பது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை: காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாகத் தமிழ்நாடு முழுவதும் கோடை வெப்பம் வரலாறு காணாத அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விவசாயப் பெருங்குடி மக்களையும், விவசாயத் தொழிலாளர்களையும் வெப்ப அலையின் (Heat Wave) தாக்கத்திலிருந்து பாதுகாக்கவும், பயிர் சேதங்களைக் குறைக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இ.ஆ.ப., வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், தற்போதைய சூழலில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
நேர மேலாண்மை மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு
வெப்ப அலையின் தாக்கம் உச்சத்திலிருக்கும் மதிய வேளைகளில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, விவசாயப் பணிகளில் ஈடுபடுபவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை விளைநிலங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து கண்காணித்து, அதற்கேற்ப தங்கள் சாகுபடிப் பணிகளைத் திட்டமிட வேண்டும். குறிப்பாக, வறட்சி மற்றும் வெப்ப அலையின் தீவிரத்தைப் பொறுத்து விதைப்பு மற்றும் அறுவடை காலங்களை மாற்றி அமைப்பது அவசியம்.
நீர்ப்பாசன மேலாண்மை மற்றும் நவீன தொழில்நுட்பம்
தண்ணீர் பற்றாக்குறை நிலவும் இக்காலகட்டத்தில், பாரம்பரியப் பாசன முறைகளைத் தவிர்த்து நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டும்.
சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம்: இம்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பயிர்களின் தட்பவெப்ப நிலையைச் சீராகப் பராமரிக்கலாம்.
பாசன நேரம்: குளிர்ச்சியான அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் நீர் பாய்ச்ச வேண்டும். இது நீர் ஆவியாவதைக் குறைத்து செடிகளின் வேர் பகுதிக்குத் தேவையான ஈரப்பதத்தை உறுதி செய்யும்.
மூடாக்கு நுட்பம் (Mulching): பயிர் மூடாக்கு அல்லது நிழல் வலைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். பல்லாண்டு பயிர்களுக்குத் தென்னை நார்க்கழிவு, இலை தழைகள் அல்லது பாலித்தீன் மூடாக்குகளைப் பயன்படுத்தலாம். இது களைகளைக் கட்டுப்படுத்துவதுடன் நீர் விரையமாவதையும் தடுக்கிறது.
பயிர் பாதுகாப்பு மற்றும் உர மேலாண்மை
அதிக வெப்பம் நிலவும் போது ரசாயன மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பகல் நேரத்தில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
"அதிக வறட்சி நிலவும் போது, 5 கிராம் பொட்டாசியம் குளோரைடை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிப்பது இலைகள் வழியாக நீர் ஆவியாவதைத் தடுக்கும். அதேபோல், **2% DAP கரைசல் மற்றும் 1% பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழியாகத் தெளிப்பதன் மூலம் பயிர்களை வறட்சியிலிருந்து மீட்கலாம்," என ஆட்சியர் தொழில்முறை ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
மேலும், 'புசா ஹைட்ரோஜெல்' (Pusa Hydrogel) என்ற தொழில்நுட்பத்தை ஹெக்டேருக்கு 2.5 முதல் 5.0 கிலோ வரை வேர்ப்பகுதியில் இடுவதன் மூலம், மண்ணில் நீரை நீண்ட நேரம் தக்கவைக்க முடியும்.
மாற்றுப் பயிர் சாகுபடி மற்றும் மண் வளம்
குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களைத் தேர்வு செய்வது இந்த காலக்கட்டத்தின் கட்டாயமாகும்.
1.சிறு தானியங்கள்: ராகி, கம்பு மற்றும் பயறு வகை பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
2. பயிர் சுழற்சி: 5 முதல் 6 மாதங்கள் வளரும் காய்கறிகளுக்குப் பதில், 2 முதல் 3 மாதங்களில் அறுவடைக்கு வரும் காய்கறிகளைப் பயிரிடலாம்.
3.பசுந்தாள் உரங்கள்: சணப்பு, தக்கைப்பூண்டு, அகத்தி போன்றவற்றை வளர்ப்பதன் மூலம் மண்ணின் நீர்ப்பிடிப்புத் திறனை அதிகரிக்கலாம். தட்டைப்பயறு போன்ற மூடுப்பயிர்கள் மண் அரிப்பைத் தடுக்கும்.
தோட்டக்கலைப் பயிர்களுக்கான சிறப்பு கவனம்
மா, எலுமிச்சை, கொய்யா போன்ற பழ மரங்கள் மற்றும் காய்கறிப் பயிர்களில் வெப்பத்தினால் மலர்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்வதைத் தடுக்க, அதிகாலை வேளையில் சுத்தமான நீரினைத் தெளிக்க வேண்டும். இது செடிகளுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
விவசாயிகள் எதிர்பாராத நஷ்டத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளக் கட்டாயம் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். விளைபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க அரசு வழங்கும் குளிர்சாதனக் கிடங்கு வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
"காலநிலை மாற்றம் என்பது நாம் எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம். முறையான நீர் மேலாண்மை மற்றும் நவீன வேளாண் உத்திகளைக் கையாள்வதன் மூலம் வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து விவசாயத்தை நாம் மீட்டெடுக்க முடியும்," என ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, கோடைக்கால வேளாண் இழப்புகளைத் தவிர்க்குமாறு அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















