ரஷ்யா-உக்ரைன் எல்லையில் சிக்கிய தமிழக இளைஞர்கள்: வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்கள் கவனத்திற்கு!
ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சீர்காழி, கரூர் ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை கோரி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ளனர்.

ரஷ்யாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சீர்காழி, கரூர் ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை கோரி மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளரிடம் இளைஞர்கள் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை: ரஷ்யா நாட்டில் மாணவர் விசாவில் வேலைக்கு அழைத்துச் சென்று முறைகேடாகப் பணியில் அமர்த்தி, கைது நடவடிக்கைக்கு உள்ளாகி சொந்த ஊருக்குத் தப்பி வந்ததாகக் கூறி கேரளா மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியாவிடம் புகார் மனு அளித்துள்ளனர். சீர்காழியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகிரதன் ஆகிய இரண்டு போலி முகவர்கள் பல இளைஞர்களை ஏமாற்றி, ரஷ்ய ராணுவத்திலும் முறைகேடான வேலைகளிலும் சேர்த்து விட்டுள்ளதாகவும், இதனால் பலர் அந்நாட்டில் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ராணுவத்தில் முறைகேடாகச் சேர்க்கப்பட்ட கேரளா இளைஞரின் வாக்குமூலம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோழிப்பாறையைச் சேர்ந்த பிரவீன் ஜான்சன் (28) என்ற இளைஞர், கரூரைச் சேர்ந்த பகிரதன் என்பவரின் இன்ஸ்டாகிராம் பதிவைப் பார்த்து அவரைத் தொடர்பு கொண்டுள்ளார். பகிரதனின் வழிகாட்டுதலின்படி, சீர்காழியைச் சேர்ந்த முகவர் அருண்குமாரின் வங்கிக் கணக்கில் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரம் பணத்தைச் செலுத்தியுள்ளார். கடந்த மே மாதம் மாணவர் விசாவில் ரஷ்யா சென்ற பிரவீன் ஜான்சனை, வேலைக்கான விசா இல்லாமல் ஒரு நிறுவனத்தில் கூலி வேலைக்கு அனுப்பியுள்ளனர்.
விசா காலக்கெடு முடிந்ததால் ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் இந்தியத் தூதரகம் மூலம் சொந்தச் செலவில் இந்தியாவிற்கு வந்துள்ளார். தம்மைப் போல் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று ரஷ்யா ராணுவத்தில் சேர்த்து விட்டதாகவும், அவர்கள் உக்ரைன் எல்லையில் மாட்டிக்கொண்டு தவிப்பதாகவும் அவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.
உணவு பேக்கிங் வேலை என்று கூறி கார் கழுவும் வேலையில் தள்ளப்பட்ட சோகம்
இதேபோல் முகவர் அருண்குமாரால் ஏமாற்றப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த ரஞ்சித்குமார் (26) என்பவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். உணவு பேக்கிங் வேலை தருவதாகக் கூறி ரூ. 5 லட்சத்து 15 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் அவரை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அவரை கார் கழுவும் வேலைக்கு அனுப்பி வைத்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு ரஷ்ய போலீசாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார்.
காவல்துறையின் உடனடி நடவடிக்கை மற்றும் பணத்தை மீட்கக் கோரிக்கை
இளைஞர்களின் வெளிநாட்டு வேலைக்கனவைச் சாதகமாகப் பயன்படுத்தி வாழ்க்கையைச் சீரழிக்கும் முகவர்கள் அருண்குமார் மற்றும் பகிரதன் ஆகிய இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக பிரமுகரான அருண்குமாரின் தந்தை சசிகுமார் நேரில் சென்று பணம் கேட்டால் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், இது குறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















