தொடங்கிய இடத்திலேயே தடுத்து நிறுத்தம்; மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினர் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி மறுப்பு
காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கிய பரப்புரை நடைபயணத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூம்புகாரில் தொடங்கி தஞ்சாவூர் வரையிலான மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினரின் பரப்புரை நடைபயணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்துள்ளனர்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் பரப்புரை நடைபயணம்
காவிரி படுகை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 24 -ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பூம்புகாரில் தொடங்கி தஞ்சாவூர் வரை பரப்புரை நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது.
பரப்புரை நடை பயணம் தொடக்கம்
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 24-ம் தேதி தனது பரப்புரை நடை பயணத்தை தொடங்கியது. வேளாண் மண்டல பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும், எண்ணெய் எரிவாயு திட்டங்களால் காவிரிபடுகை கனிம கொள்ளையை தடுத்து நிறுத்தி பாதுகாக்க வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு 24ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பூம்புகாரில் இருந்து தஞ்சாவூர் வரை பரப்புரை நடைப்பயணம் பூம்புகாரில் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் காவல்துறையினர் நடைபயணத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் நடைபயணம் சென்றவர்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாகனத்தில் சென்று விழிப்புணர்வு செய்து கடைகள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்க அனுமதி மறுத்த காவல்துறையினர் மாலை நேர பொதுக்கூட்டம் மட்டும் அனுமதி வழங்கினர்.
கோரிக்கை விபரம்
காவிரிப்படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல சட்டவரம்புக்குள் கொண்டு வர வேண்டும்.
கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களும் வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும்.
காவிரிப்படுகையில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டுமே நடைபெற வேண்டும். வேளாண் மண்டலம் தொழில் மண்டலம் ஆகக்கூடாது.
விளைநிலங்கள் விளைநிலங்களாகவே தொடர பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
காவிரிப்படுகை வேளாண் மண்டலத்தில் பழைய எண்ணெய் - எரிவாயுக் கிணறுகளின் வயதை நிர்ணயித்து, கிணறுகளின் அடிப்படை ஆவணங்கள் மற்றும் செயல்படத் தேவையான அனுமதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, சட்டவிரோதக் கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும்.
தொழிலக அனுமதிகள், எண்ணெய் எரிவாயுத் திட்டங்கள் தொடர்பான மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகள் நெறிப்படுத்தப்பட வேண்டும்.
எண்ணெய் எரிவாயுத் திட்டங்களால் காவிரிப்படுகை அடைந்த பாதிப்புகள் குறித்த பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் ஆய்வு அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
தமிழகக் கடற்பகுதியில் மீன்வளத்தையும், மீன் பிடித் தொழிலையும், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்களையும் காப்பதற்காக, கடற்பகுதியிலும் எண்ணெய் - எரிவாயுக் கிணறுகள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும். விளைநிலங்களின் குறுக்கே எண்ணெய் - எரிவாயுக் குழாய்கள் அமைப்பதைத் தடை செய்ய வேண்டும்.
காவிரிப்படுகையில் உள்ள ஏரி, குளம், பாசனக் கால்வாய்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நீர்நிலைகள் மீட்கப்பட வேண்டும். காவிரிப்படுகை முழுவதும் நீர் பாசனக் கட்டமைப்பு, நீர் மேலாண்மை செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசுகளுக்கே உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசமைப்பு அமர்வு 25.7.2024 அன்று தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டின் கனிமங்களின் மீதான வரி விதிப்புக் கொள்கையை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். கனிமவளச் சூறையைத் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் இயற்கை வளம் மற்றும் கனிம வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மீத்தேன் எதிர்ப்பு குழுவினர் நடைபயண பேரணியை தொடங்கினர். இதில் தந்தை பெரியார் திராவிட கழகம், விவசாய சங்கத்தினர், தமிழக மக்கள் முன்னணி, மார்க்சிய பெரியார் பொதுவுடமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மனிதநேய மக்கள் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், மக்கள் தமிழக கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றிருந்த நிலையில் மீத்தேன் எதிர்ப்பு திட்ட குழுவினரின் பரப்புரை நடைப்பயணத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அனுமதி மறுத்து மாலை நேர பொதுக்கூட்டம் மட்டும் அனுமதி வழங்கினர்.