இந்தாண்டு பருவமழை தண்ணீர் எங்கே நிக்குதுன்னு பாக்குறேன் - ஆட்சியர் அதிரடி..!
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் வாய்க்கால்களில் தீவிர ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 15 -ம் தேதி தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. அதனைத் தொடர்ந்து மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மழை நேரங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்து பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் வடிகால் வாய்க்கால்கள் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர்வாரியும், மழை நேரங்களில் மழைநீர் சரியாக சென்று வடியும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிரம்
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இப்பணிகள் குறித்து மாவட்ட முழுவதும் நேரில் சென்று ஆய்வு செய்யது வருகிறார். மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட வடிகால் வாய்க்கால்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கூறைநாடு பகுதியில் உள்ள பெரியக்குளம் வாய்க்காலில் மழைநீர் செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தினார்.
மயிலாடுதுறை வாய்க்கால்கள்
அதேபோன்று திருமஞ்சன வீதி, பட்டமங்கலம் ஆராயத்தெருவில் உள்ள வடிகால் வாய்கால்களில் மழைநீர் செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர் மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை, துலாகட்டம் படித்துறைகளை ஆய்வு செய்து, எதிர்வரும் துலா உற்சவம் நிகழ்ச்சியில் பக்தர்கள் சிரமமின்றி நீராடுவதற்கு ஏற்றவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் ஊரக, நகர பகுதிகளில் மழைநீர் வடிவதற்குரிய வாய்க்கால்களை உடனடியாக ஆய்வு செய்து, வடிகால் வாய்க்கால்களில் மழைநீர், செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
வார்டு வாரியாக பணி
காச்சேரி சாலையில் உள்ள பழங்காவேரி வாய்க்கால், 34 வது வார்டு, பட்டமங்கலம் ஆராயத்தெருவில் சீத வாய்க்கால், 31 வது வார்டு பட்டமங்கலம் ஆராயத்தெரு பெரியக்குளம் மேல்கரை, வார்டு-30 தனியூர் குடியிருப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால், ஆரோக்கிய நகர் பகுதியில் உள்ள தூக்கநாங்குளம், மாயூரநாதர் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால், ஹாஜியாநகர் காவேரி ஆற்றங்கரை வடிகால் அமைப்புகள், வார்டு-3 அம்பேத்கர் நகரில் உள்ள வடிகால் வாய்க்கால், திருமஞ்சன வீதி எம்.ஜி.ஆர் காலனியில் உள்ள வடிகால் வாய்க்கால், ஆனதாண்டவபுரம் பகுதியில் உள்ள சேந்தங்குடி வாய்க்கால் ஆகியவைகளை பார்வையிட்டு தூய்மைப்படுத்தும் பணிகளை தூரித படுத்தி மழைநீர் விரைந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நகராட்சி செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
சீர்காழி தாலுக்கா
இதேபோல் முன்னதாக சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி களஆய்வு மேற்கொண்டார். மேலும் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஸ்ரீநகர் வடிகால் வாய்கால், ஊழியக்காரன் தோப்பு பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுகளை அகற்றி வாய்க்கால் தூய்மைப்படுத்துவதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊரக, நகர பகுதிகளில் மழைநீர் வடிவதற்குரிய வாய்க்கால்களை உடனடியாக ஆய்வு செய்து, வடிகால் வாய்க்கால்களில் மழைநீர் செல்வதற்கு இடையூராக உள்ள கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின் தாக்கம் குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வில் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, மயிலாடுதுறை நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி, சீர்காழி வட்டாட்சியர் அருள்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.