"இத்தனை வருஷமா எங்கள மனுஷனா கூட மதிக்கல.." மனுக்கள் குப்பைக்கு போன காலம் போச்சு.. மக்கள் தேடி வரும் தவெக ஆட்சி!
தவெக ஆட்சி அமைந்த 2 மாதங்களில் செம்பனார்கோவில் நரிக்குறவர் மக்களுக்கு பட்டா, சாதிச் சான்றிதழ் வழங்க அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா, செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எதிரே சாலையோரம் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக கூடாரங்கள் (டென்ட்) அமைத்து மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகின்றனர். தங்களுக்கு நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்றும், தங்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் கல்வி கற்க அரசு உதவ வேண்டும் என்றும் இக்குடும்பத்தினர் கடந்த பல ஆண்டுகளாக முந்தைய அரசிடமும், அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், கடந்த காலங்களில் இவர்களது கோரிக்கைகள் மீது எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல், இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவே நீடித்து வந்தது.
ஆட்சி மாற்றமும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையும்
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்த இரண்டே மாதங்களில், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த இக்கோரிக்கை மீது அதிகாரிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் உதவ முன்வந்துள்ளனர். இது அப்பகுதி பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் சிறப்பான வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் பேரில், நரிக்குறவர் சமுதாய மக்களின் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்டறிந்து தீர்வு காண அதிகாரிகள் குழு இன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது.
நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள் குழு
சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகன் மற்றும் தரங்கம்பாடி வட்டாட்சியர் ராகவன் ஆகியோர் அடங்கிய வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள், செம்பனார்கோவில் காவல் நிலையம் எதிரே சாலையோரத்தில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்களை இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அப்போது, தங்களது அடிப்படைத் தேவைகளான இருப்பிட வசதி, குடிநீர் மற்றும் சாதிச் சான்றிதழ் இல்லாததால் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க முடியாத அவல நிலை குறித்து மக்கள் அதிகாரிகளிடம் கண்ணீருடன் எடுத்துரைத்தனர். மக்களின் குறைகளை மிகவும் கனிவுடன் கேட்டறிந்த கோட்டாட்சியர் பாலமுருகன், அவர்களுக்குத் தேவையான நிரந்தர வீட்டுமனைப் பட்டா மற்றும் சாதிச் சான்றிதழ்களை எவ்வித தாமதமும் இன்றி தங்கு தடையின்றி வழங்குவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம்
இப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாயக் குழந்தைகள் போதிய வழிகாட்டுதல் மற்றும் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால், பள்ளிகளுக்குச் செல்ல முடியாமல் இடைநிற்றல் மற்றும் கல்வி பயிலாத சூழ்நிலையில் தவித்து வந்தனர். இதனை அறிந்த அதிகாரிகள், அங்குள்ள பள்ளி வயதுக் குழந்தைகளை உடனடியாகக் கணக்கெடுப்பு செய்ய உத்தரவிட்டனர்.
"இப்பகுதியில் உள்ள ஒரு குழந்தை கூட கல்வியறிவு பெறாமல் இருக்கக் கூடாது. அனைத்துக் குழந்தைகளையும் கணக்கெடுத்து, அவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கும், சீருடை, புத்தகங்கள் மற்றும் கல்வி பயிலத் தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முழுமையாகச் செய்து தருவோம்," என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மக்கள் நெகிழ்ச்சியும் நன்றியும்
அதிகாரிகளின் இந்த உடனடி மற்றும் கனிவான நடவடிக்கையைக் கண்டு அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து, அதிகாரிகளுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். இதுகுறித்து அங்கு வசிக்கும் நரிக்குறவர் சமூக மக்கள் கூறுகையில்; "கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் இந்த சாலையோரத்தில் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டு வருகிறோம். எங்களைக் கண்டு கொள்ள யாருமே இல்லை. எத்தனையோ முறை மனுக்கள் கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை.
ஆனால், தளபதி விஜயின் தவெக ஆட்சி அமைந்த இரண்டே மாதங்களில், அதிகாரிகள் எங்களைத் தேடி வந்து குறைகளைக் கேட்டிருப்பது எங்களுக்குப் புது நம்பிக்கையைத் தந்துள்ளது. அதிகாரிகள் முதன்முறையாக எங்களை நேரில் வந்து பார்த்து, பட்டா தருவதாகவும், எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதாகவும் கூறியிருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆட்சி மாற்றமே எங்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். புதிய ஆட்சி அமைந்த குறுகிய காலத்திற்குள், அடித்தட்டு மக்களின் அடிப்படைப் பிரச்சினையை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























