(Source: ECI/ABP News/ABP Majha)
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளி தற்கொலை முயற்சி - மயிலாடுதுறையில் பரபரப்பு
மயிலாடுதுறையில் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை மிரட்டல் விடுத்த வழக்கில் சிறையில் இருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையில் ஆபாச வீடியோ எடுத்து மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை மிரட்டல் விடுத்த வழக்கில் சிறையில் இருந்த மூவேந்தர் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் தற்கொலை முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிக்கு மிரட்டல்
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் வெங்கடேசன். இவர் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD -EE) செயற்பொறியாளராக பணியில் உள்ளார். இவர் பணி நிமித்தமாக காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற குடியிருப்பு வளாகத்தில் தனி வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் இவருக்கு, மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சீனிவாசபுரம் கம்பர் தெருவை சேர்ந்த ஐயப்பன் என்பவரது மனைவி 40 வயதான சுபாஷிணி என்பவருடன் புரோக்கர் மூலமாக தொடர்பு ஏற்பட்டு, கடந்த 6 மாதங்களாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்
ஒவ்வொரு முறையும் சுபாஷிணி காரைக்காலுக்கு செல்லும்போதும் தனது குடும்ப வறுமையை காரணம் காட்டி சிறுக சிறுக வெங்கடேசனிடம் பணம் பெற்றுள்ளார். அப்போது ஒருமுறை இருவரும் தனிமையில் இருந்ததை கடந்த ஏப்ரல் மாதம் 27-ஆம் தேதி வெங்கடேசனுக்கு தெரியாமல் சுபாஷிணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர், கடந்த மாதம் 29-ஆம் தேதி வெங்கடேசனை மயிலாடுதுறை காவேரி நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு வரவழைத்த சுபாஷிணி, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி துணை செயலாளரான மயிலாடுதுறையை சேர்ந்த 40 வயதான கில்லி பிரகாஷ் என்பவருக்கு தகவல் தெரிவித்து தனியார் விடுதிக்கு வரவழைத்துள்ளார்.
பணம் பறிப்பு
அங்கு தனது கூட்டாளிகளான 39 வயதான முகமது நசீர், 31 வயதான தினேஷ் பாபு ஆகியோருடன் வந்த கில்லி பிரகாஷ் சுபாஷினியுடன் இணைந்து வெங்கடேசனின் கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் இருந்து ஏடிஎம் கார்டு மற்றும் ஜிபே வாயிலாக 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மாற்றியுள்ளனர். மேலும், சுபாஷினியுடன் வெங்கடேசன் தனிமையில் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கூடுதலாக 10 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறி மிரட்டி அனுப்பி உள்ளனர்.
குற்றவாளிகள் கைது
இச்சம்பவம் குறித்து வெங்கடேசன் கடந்த மாதம் மே 21 -ம் தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் கில்லி பிரகாஷ், சுபாஷினி உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஆண் குற்றவாளிகள் மூவரையும் மயிலாடுதுறை கிளை சிறையில் அடைத்தனர். சுபாசினியை திருவாரூர் சிறைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட கில்லி பிரகாஷ் 2011 ஆம் ஆண்டு முதல் சரித்திரப்பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்கொலை முயற்சி
இந்த சூழலில் மயிலாடுதுறை காவல் நிலைய குற்றவியல் பட்டியலில் இடம்பெற்றுள்ள கில்லி பிரகாஷ் மீது கொலை, அடிதடி கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதை தொடர்ந்து மாவட்ட காவல கண்காணிப்பாளர் மீனா பரிந்துறையின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கில்லி பிரகாஷ்சை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை சிறையில் உள்ள ஜன்னலில் தான் கட்டியிருந்த கைலியால் தூக்குபோட்டு கில்லி பிரகாஷ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக சிறைத்துறை போலீசார் கில்லி பிரகாஷ்சை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சூழலில் கில்லி பிரகாஷ்சை பார்க்க அவரது தம்பி முரளியை போலீசார் அனுமதிக்கவில்லை, இதனால் கில்லி பிரகாஷ் தற்கொலை முயற்சிக்கு போலீசார்தான் காரணம் என குற்றம்சாட்டி கூச்சலிட்டு தான் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெய்யை தலையில் ஊற்றி தீக்குளிக்க முற்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த போலீசார் முரளியின் தலையில் தண்ணீர் ஊற்றி தடுத்து அவரை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.