Mayiladuthurai leopard: பிக்பாஸ் வீட்டை மிஞ்சும் கேமராக்கள்; அதிகரிக்கப்பட்ட கூண்டுகள் - சிக்குமா சிறுத்தை....?
மயிலாடுதுறையில் சுற்றித்திரியும் சிறுத்தையினை பிடிக்க கேமராகள் மற்றும் கூண்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர்.
மயிலாடுதுறை வனநிலவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் காப்புக்காடுகள் சுமார் 1000 ஹெக்டர் அளவில் உள்ளது. இவை அனைத்தும் பெரும்பாலும் கடலோர வனப்பகுதிகளாக உள்ளன. இங்கு உள்ள வனப்பகுதிகளில் தரி, புள்ளி மான் போன்ற வன விலங்குகள் காணப்படுகின்றன. இதுவரை மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை போன்ற விலங்குகள் இருந்ததாகவோ காணப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.
கேமராவில் சிக்கிய சிறுத்தை
இந்நிலையில் 02.04.2024 அன்று மயிலாடுதுறை, செம்மங்குளம் பகுதியில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை போன்ற விலங்கு பதிவாகி இருந்ததை அறிந்து காவல் துறையின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் உடனடியாக வனத்துறையின் மூலம் குழுக்கள் அமைக்கப்பட்டு, முதல் நடவடிக்கையாக சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்வதற்காக தானியங்கி கேமராக்கள் சில இடங்களில் பொருத்தபட்டன. அவ்வாறு பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கேமரா மூலம் 03.04.2024 அன்று இரவு சிறுத்தையின் உருவம் தெளிவாக கிடைக்கப்பெற்று உறுதி செய்யபட்டது.
சிறுத்தை பிடிக்க நடவடிக்கை
அடுத்தகட்ட நடவடிக்கையாக கூடுதலாக ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து தானியங்கி கேமராக்களும், சிறப்பு பயிற்சி பெற்ற வேட்டை தடுப்பு காவலர்களும், மேகமலை புலிகள் காப்பகத்திலிருந்து சிறுத்தையை பிடிப்பதற்கான சிறப்பு கூண்டுகளும் வரவழைக்கபட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்த கண்காணிப்பு பணிகள் துரிதபடுத்தபட்டன. மேகமலை புலிகள் காப்பகத்திலிருந்து கால் நடை மருத்துவர் Dr. கலைவாணன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திலிருந்து கால் நடை மருத்துவர் Dr. விஜயராகவன் வரவழைக்கப்பட்டு சிறுத்தையை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பினை தீவிரப்படுத்தும் வகையில் படிப்படியாக தானியங்கி கேமராக்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது 20 கேமராக்கள் பொருத்தியுள்ளனர், சிறுத்தையை பிடிக்க வைக்கப்பட்ட கூண்டுகளின் எண்ணிக்கையும் 3 இருந்து 7 ஆக உயர்த்தியுள்ளனர், டிரோன் கேமராக்கள், தெர்மல் டிரோன் கேமரா மற்றும் இதர உயர் தொழிற்நுட்ப உபகரணங்கள் வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்டு, வன உயிரின காப்பாளர், நாகபட்டினம் தலைமையில் பல்வேறு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்து பாதுகாப்பாக பிடிப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு துறைகளில் உதவி
மேலும், மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு துறை போன்ற இதர துறைகளை ஒருங்கிணைத்து அவர்களிடமிருந்து தேவையான உதவிகள் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர மயிலாடுதுறை பகுதியில் உள்ள வன உயிரின வல்லுநர்களும் அந்த பகுதி குறித்த கள தகவல்கள் அறிந்த நிபுணர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தலைமை வன உயிரின காப்பாளர், சென்னை அவர்களின் அறிவுறுத்தலின்படி, கூடுதல் முதன்மை தலைமை வன உயிரினம் முனைவர். நாகநாதன் மயிலாடுதுறைக்கு வந்து சிறுத்தையை பிடிப்பதற்காக எடுக்கப்பட்டு நடவடிக்கைகளுக்கான குழுவில் இணைந்து தற்போது நேரடியாக குழுவினை தலைமையேற்று தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட கூண்டுகள்
தற்போது கூடுதலாக திருப்பூர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டு ஆரோக்கியநாதபுரம் , திருனாமுல்கொண்டச்சேரி, ரயில் நிலையம் அருகே உள்ள பகுதி உள்ளிட்டவற்றில் 7 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் அறிவுரை
சிறுத்தையானது மனித அருகாமையை தவிர்க்கும் விலங்காதலாலும், சிறு விலங்குகளையே வேட்டையாடும் தன்மை கொண்டதாலும், பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாமென்றும், தேவையற்ற மற்றும் அச்சம் தரக்கூடிய தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மனித நடமாட்டத்தை தவிர்க்குமாறும். கண்டிப்பாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை வெளியில் அனுப்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் கள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும், கூட்டம் சேர்ந்து கள நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யாது இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. அத்துடன் சிறுத்தை நடமாட்டம் குறித்து எவ்வித தகவல் கிடைத்தாலும் வனத்துறைக்கு ஜோசப் டேனியல், வனச்சரக அலுவலர் 9994884357 ஜெயச்சந்திரன், வனச்சரக அலுவலர் -5060177807) தகவல் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கிராம அளவில் இளைஞர்கள் நன்னார்வத்துடன் கிராம ஒத்துழைப்பை உறுதி செய்யுமாறும், அரசு துறைகளின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாய் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.