Mayiladuthurai: மூடுவிழா காணும் மயிலாடுதுறையின் பிரபல திரையரங்கம்; சோகத்தில் ரசிகர்கள் - கடைசிப்படம் என்ன..?
மயிலாடுதுறையின் பிரபல திரையரங்கமான 'பியர்லெஸ்' தனது 62 ஆண்டு கால திரை பயணத்தை முடித்துக் கொள்ளுகிறது. பல திரைப்பட விரும்பிகளின் 'வண்ணத் தொழிற்சாலையாக' இருந்த 'பியர்லெஸ்' திரையரங்கம் மூடப்படுகிறது.
ஒரு திரைப்படம் பார்க்க வேண்டுமென்றால் திரையரங்கம் சென்றுதான் பார்க்க வேண்டும் என்று ஒரு காலம் இருந்தது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளால் திரைப்படங்களை காண்பதிலும், திரைப்படங்களை வெளியிடுவதிலும்கூட பல மாற்றங்கள் வந்துவிட்டன. என்னதான் ஓடிடி தளங்களில், அமர்ந்த இடத்திலிருந்து ஒரே நாளில், ஒரே மூச்சில் மூன்று, நான்கு படங்களை பார்த்தாலும், பலகோடிகள் செலவு செய்து, பல்லாயிரம் பேர் வியர்வை சிந்தி, அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நம் மனதுக்கு பிடித்த நாயக, நாயகிகளை சுமார் 76க்கு 97 அடியில் திரையில் பன்ச் வசனங்களை, பக்காவான ஒளி, ஒலி சேர்க்கையோடு தெறிக்கவிட்டு, கைதட்டல், விசில் சத்தம் என பல ஆராவாரங்களுடன் காணும்போது திரைப்பட ரசிகர்கள் ஒருவிதமான பரவச நிலையை அடைவார்கள்.
செயற்கைகோள் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு வரை, பெரும்பாலும் திரையரங்கங்களில் மட்டுமே திரைப்படங்களை பார்க்க முடியும். சில ஊர்களில் அவ்வப்போது விசேஷ வீடுகளில், கோவில் திருவிழாக்களில் தொலைக்காட்சிப் பெட்டியையும், கேஸட்டுகளையும் வாடகைக்கு எடுத்து வந்து படங்கள் பார்க்கும் வழக்கம் இருந்தது. 60,70,80 மற்றும் 90ஸ் குழந்தைகளுக்கு ஒவ்வொரு திரைப்பட அனுபவமும் ஓராயிரம் கதைகளை சொல்லும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் திரையரங்கம் சென்று திரைப்படம் பார்ப்பதே எட்டாக்கனியாக இருந்த காலம் உண்டு. திருமணத்திற்கு பிறகு கணவருடன் பார்த்த முதல் படம், காதலர்களாக கார்னர் சீட்டில் அமர்ந்து பார்த்தப்படம், சிறு வயதில் முதன் முதலில் திரையரங்கம் சென்று பார்த்த படம் என்று நம் திரைப்படங்கள் பற்றி எதை நினைவு கூறினாலும், நாம் எந்த திரையரங்கில் பார்த்தோம் என்று திரையரங்கின் பெயரை கூறவும் மறக்க மாட்டோம். செல்லும் இடங்களிலெல்லாம் ஏற்றத்தாழ்வுகளை கடைப்பிடித்த இந்த சமூகத்தில், வெவ்வேறு சமூக சூழலை கொண்டவர்களை ஒன்றிணைத்தது திரையரங்கங்கள். திரைப்படகலையின் மீது தீரா காதல் கொண்டவர்களே திரையரங்கங்களை தொடங்கினர்.
தொழில்நுட்பங்களும், தொலைத்தொடர்புத் துறையும் பெரிதும் வளர்ந்திராத காலகட்டத்தில், ஒரு படத்தை வாங்கி திரையில் ஓட்டுவதென்பது பெரும் மெனக்கெடல்கள்களை கொண்டதாகும். பெரு நகரங்கள், சிறு நகரங்கள், சிற்றூர்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் பல திரையரங்குகள் பல்வேறு காரணங்களால் மூடப்பட்டு வருகின்றன. ஆசியாவிலேயே பெரிய திரையரங்கம் எனப் பெயர் பெற்ற 'தங்கம்' திரையரங்கிற்கே மூடு விழா கண்டோம். அந்த வகையில் மயிலாடுதுறையில், ஊரின் மிக முக்கிய பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான, பழமையான 'பியர்லெஸ்' திரையரங்கம் மூடப்படுவதாக தெரிகிறது. ஒரு காலத்தில் இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள் என பல தரப்பினரின் விருப்பமான திரையரங்கமாக இருந்த இந்த அரங்கம், போதிய கூட்டம் வராததால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக தெரிகிறது. மயிலாடுதுறையில் 1962- ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரையரங்கம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது.
முதல் முதலாக 1962 -ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ஏ.பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசன் நடித்திருந்த 'பார்த்தால் பசி தீரும்' படத்துடன் தனது திரைப்பயணத்தை தொடங்கிய 'பியர்லெஸ்' தியேட்டர் தற்போது ராம்தேவ் இயக்கத்தில் பாக்கியராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள 'மூன்றாம் மனிதன்' படத்துடன் தனது ஓட்டத்தை நிறுத்திக்கொள்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்றவாறு பல திரையரங்குகள் மாற்றியமைக்கப்பட்டு, டிக்கெட் கட்டணமும் உயர்த்தப்பட்டன. ஆனால், 'பியர்லெஸ்' திரையரங்கம் ஏசி, சீட்டுகள் உள்ளிட்டவை மாற்றியமைக்காமல், தனி திரையரங்கிற்கு அரசாங்கம் நிர்ணயம் செய்த டிக்கெட் விலையை மட்டுமே வசூலித்து வந்தது. இதனால் மயிலாடுதுறை பகுதிகளில் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற திரையரங்கமாக இந்த 'பியர்லெஸ்' திரையரங்கம் இருந்து வந்தது. ஒரு காலத்தில் அனைத்து தரப்பினராலும் பெரிதும் விரும்பப்பட்டு, பல ஹிட் படங்களை ஓஹோ என்று ஓட்டிக் கொண்டிருந்த திரையரங்கம் மூடப்படுவது அந்த திரையரங்கத்தில் பல இனிமையான நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் திரை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.