"திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் அகதிகளாவார்கள்" - பகீர் கிளப்பிய பி.ஆர்.பாண்டியன்
விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போடுவதாகவும், நிலங்களைப் பறிப்பதாகவும் கூறி திமுக அரசுக்கு எதிராக பி.ஆர். பாண்டியன் சீர்காழியில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

சீர்காழி: தமிழகத்தில் விவசாயிகள் மிக மோசமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருப்பதாகவும், உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் விவசாயிகள் மீது அடக்குமுறையை ஏவும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் விவசாயிகள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர். பாண்டியன் கடுமையாகச் சாடியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் மீதும் முதல்வர் ஸ்டாலின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
விவசாயிகள் மீது ஏவப்படும் அடக்குமுறை
செய்தியாளர் சந்திப்பில் பி.ஆர். பாண்டியன் பேசியதாவது:
"கடந்த ஐந்து கால திமுக ஆட்சியில் தமிழக விவசாயிகள் சந்திக்காத நெருக்கடிகளே இல்லை. தங்களின் வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடும் விவசாயிகள் மீது பொய் வழக்குகளைச் சுமத்தி, அவர்களைச் சிறையில் அடைத்து சித்திரவதை செய்யும் போக்கை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. விவசாயிகளைப் பாதுகாப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளையே எதிரிகளாகப் பார்க்கிறார்கள்.
தமிழக அரசின் 'நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023' என்பது விவசாயிகளின் மரண சாசனம். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், விவசாயிகளின் விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகளின் உரிமை முழுமையாகப் பறிக்கப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவே இந்த அரசு செயல்படுகிறது."
சிப்காட் அபகரிப்பும் முதலமைச்சரின் மௌனமும்
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் முழுவதும் சுமார் 33 இடங்களில் விளைநிலங்களை அபகரித்து சிப்காட் அமைக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களைப் பறித்து சிப்காட் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை, அங்கு தொழிற்சாலைகளைத் தொடங்குவதில் அரசு காட்டவில்லை. இதுவரை எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன, எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். விவசாய நிலங்களை தரிசாக மாற்றுவதே இந்த அரசின் ரகசியத் திட்டமாக உள்ளது" எனக் குற்றம் சாட்டினார்.
மயிலாடுதுறை மாவட்ட குத்தகை விவசாயிகள் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், "சீர்காழி சட்டைநாதர் கோயில், வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான நிலங்களில் பயிரிடும் 80 சதவீதத்திற்கும் அதிகமான குத்தகை விவசாயிகளின் உரிமைகளை இந்த அரசு திட்டமிட்டுப் பறித்து வருகிறது. காலம் காலமாகப் பயிர் செய்து வரும் விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறது. இது இப்பகுதி விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடும்" என்றார்.
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை மோசடி
"திருமண்டங்குடி சர்க்கரை ஆலையில் சுமார் 3,000 விவசாயிகள் பெயரில் 500 கோடி ரூபாய்க்கு மேல் போலி கடன் பெறப்பட்டுள்ளது. இது ஒரு மாபெரும் ஊழல். பல ஆண்டுகளாகப் போராடியும், இந்த மோசடிக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு காலந்தாழ்த்தி வருவது வேதனையளிக்கிறது. விவசாயிகளின் பெயரில் உள்ள கடன்களை ரத்து செய்யாமல் அவர்களைத் தற்கொலை விளிம்பிற்குத் தள்ளுகிறது இந்த திமுக அரசு.
அதேபோல், கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைக்காக நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் தெற்கு ராஜன் வாய்க்கால் பாசனத் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. விளைநிலங்களை இழந்த விவசாயிகள் நடுத்தெருவில் நிற்கிறார்கள்" என்று ஆதங்கப்பட்டார்.
தேர்தல் எச்சரிக்கை: "திமுக வந்தால் விவசாயிகள் அகதிகளாவார்கள்"
இறுதியாகத் தேர்தல் குறித்து எச்சரித்த பி.ஆர். பாண்டியன், "விவசாயிகளுக்கு எதிரான மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்தும் திமுக அரசுக்கு எதிராக விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க முடிவு செய்துள்ளோம். மீண்டும் ஒருமுறை திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்திலேயே அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்படும். விவசாயிகளின் கோபத்தை வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கும்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான விவசாயிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராகத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















