"அவசரப்பட்டு யாரையும் குற்றம் சொல்ல வேண்டாம்": கரூர் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் பார்க்கவேண்டும் - கே.எஸ். அழகிரி
கரூர் விவகாரத்தில் அவசரப்பட்டு யாரையும் குற்றம் சொல்லாமல் அதனை மனிதாபிமானத்துடன் பார்க்கவேண்டும் என கே.எஸ். அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலாடுறை மாவட்டம் சீர்காழியில் இன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஓட்டுத் திருட்டுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கரூரில் ஏற்பட்ட துயரச் சம்பவம், அதன் மீதான அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் மற்றும் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றக் கூட்டம் குறித்து அழகிரி விரிவாகப் பேசினார்.
கரூர் சம்பவம்: கூட்ட நெரிசலே முழு காரணம்
கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தொடர்பாகத் தமிழக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷனின் அறிக்கை வந்த பின்னரே காங்கிரஸ் கட்சி அது குறித்து அதிகாரப்பூர்வக் கருத்துகளைத் தெரிவிக்கும் என்று அழகிரி முதலில் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் குறித்த காணொலிகளை (வீடியோ) முழுமையாக ஆராய்ந்து பார்த்ததில், "இந்த உயிரிழப்புகள் கூட்ட நெரிசலால் ஒருவர் மேல் ஒருவர் விழுந்ததால் ஏற்பட்டனவே தவிர, தனிநபர் தூண்டுதலால் நடந்ததாகத் தெரியவில்லை. "அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது உணர்ச்சிவசப்பட்டோ தனிநபரான செந்தில் பாலாஜி மீதோ அல்லது மாநில அரசின் மீதோ குற்றம் சாட்டுவது சரியான நிலைப்பாடு அல்ல. அந்த கூட்டத்தைப் பார்த்தாலே, நெரிசல் காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. எனவே, அவசரப்பட்டு யாரும் குற்றம் குறை சொல்ல வேண்டாம். இதனை அரசியலாக்க வேண்டாம்.
முதல்வர் நிதானம் பாராட்டுக்குரியது
இந்த உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்னும் எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருப்பது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த அழகிரி, "தமிழக முதலமைச்சர் நிதானம் தவற மாட்டார்; அவசரப்பட மாட்டார். தான் சொல்ல வேண்டியதை, செய்ய வேண்டியதை அழுத்தமாகச் செய்யக்கூடியவர் அவர். இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களில் நன்கு அலசி ஆராய்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். அதனால்தான் முதலமைச்சர் எந்தக் கருத்தையும் சொல்லாமல் இருக்கிறார். இது மிகவும் சரியான அணுகுமுறை" என்றார்.
அல்லு அர்ஜுன் விவகாரம்: சிறை தண்டனை சரியானதல்ல
நடிகர் விஜய்யைக் கைது செய்யாதது ஏன் என்ற திருமாவளவனின் கருத்து குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அழகிரி, தெலுங்கானாவில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாகக் கூறினார். "தெலுங்கானாவில் நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு திரையரங்கிற்கு வந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது அங்குள்ள அரசாங்கம் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. பின்னர் விடுதலை ஆனார். அதுபோல் இங்கேயும் நடக்க வேண்டும் என நான் கூறவில்லை. அது சரியானதாகவும் இருக்காது என்பது எனது கருத்து, "அதிகப்படியான கூட்டம், ஆர்வமான கூட்டம், இவை நெரிசலால் ஒருவர் மீது ஒருவர் விழுந்துதான் மரணம் நிகழ்ந்திருக்கிறது. யாரும் திட்டமிட்டு இதைச் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தை நடத்தியவர்களுக்கு அனுபவம் இல்லை. மக்கள் ஆதரவு இருந்தாலும், ஒரு மிகப்பெரிய கூட்டத்தை நடத்துவதற்கான அனுபவம் அவர்களுக்கு இதுவரை வரவில்லை."அவ்வளவு நெருக்கடியான கூட்டத்தில் விஜய் கூட மேலிருந்து தண்ணீர் பாட்டிலை வீசியிருக்கிறார். அதனைப் பிடிப்பதற்காகச் சிலர் முண்டியடித்திருக்கின்றனர். சின்ன கூட்டங்களில்கூட தண்ணீர் பாட்டிலை வீசினால், அதைப் பிடிப்பதற்காக முண்டியடிக்கும்போது நெரிசல் ஏற்படும்.
விஜய்யின் பொறுப்பு: வலுவான தொண்டர் அணி தேவை
"இவ்வளவு மக்களைக் கூட்டுகிற சக்தியை விஜய் பெற்றிருக்கிறார். எனவே, அவர் இனிவரும் காலங்களில் இதுபோன்ற கூட்டங்களை நடத்த வேண்டும் என்றால், இந்தக் கூட்டத்தை முறைப்படுத்துகிற வலுவான தொண்டர் அணியையும், இளைஞர் அணியையும் உடனடியாக உருவாக்க வேண்டும். எல்லாவற்றையும் அரசாங்கம் பார்த்துக் கொள்ளும் என்று கூற முடியாது. ஒரு நிகழ்ச்சியை நாம் நடத்துகிறோம் என்றால், அதற்கான பாதுகாப்பை நாம்தான் கொடுக்க வேண்டும்."
மேலும், முதல்வரின் கூட்டங்களுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு, இங்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விக்கும், "முதல்வருக்கு உண்டான பாதுகாப்பு வேறு; ஆளுநருக்கு உண்டான பாதுகாப்பு வேறு. பிரதமருக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்படாது. ஒரு காவல் அதிகாரி எங்கு செல்ல வேண்டுமோ, அதற்கான வரைமுறைகள் (புரோட்டோகால்) உள்ளது. ஒரு மாநிலத்தின் முதல்வருக்குக் கிடைக்கும் பாதுகாப்பை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்குவது இயலாத காரியம்."
"எனவே, இனிமேல் நடைபெறும் கூட்டங்களுக்கு, கூட்டத்தை நடத்துபவர்கள் தங்களது தொண்டரணியைப் பாதுகாப்பிற்கு வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா கட்சியிலும் அது உள்ளது. விரைவில் விஜய்யும் அதைச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்
இறுதியாக, "இதில் காவல்துறை தவறு செய்தார்களா? வருவாய்த் துறை தவறு செய்தார்களா? கூட்டத்தை நடத்தியவர்கள் தவறு செய்தார்களா? என்பதை நீதிமன்றம் தான் அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர முடியுமே தவிர, மற்றவர்கள் கூற முடியாது" இந்தக் கூட்ட நெரிசலை விவகாரத்தை மனிதாபிமானத்துடன் பார்க்கவேண்டும் என்றார்.






















