"ஐந்து வருஷமா எங்க போனீங்க?” - பூம்புகாரில் தி.மு.க வேட்பாளர் நிவேதா முருகனைச் சுற்றிவளைத்த பொதுமக்கள்!
ஓட்டு கேட்டு சென்ற பூம்புகார் திமுக வேட்பாளரை கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிப் பக்கம் வரவில்லை என கூறி மக்கள், அவரைச் சுற்றிவளைத்து சரமாரி கேள்வி எழுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் தொகுதியில் ஆளுங்கட்சி தரப்பு வேட்பாளருக்கு எதிராக வெடித்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொகுதிப் பக்கமே வராமல், தற்போது தேர்தலுக்காக மட்டும் வாக்கு கேட்க வருவதாகக் கூறி, தி.மு.க வேட்பாளர் நிவேதா முருகனைப் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பித் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் வலுத்த எதிர்ப்பு
பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தொகுதி முழுவதும் தீவிரமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், குத்தாலம் தாலுகா, கோமல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டூர் கிராமத்திற்குத் திறந்த வாகனத்தில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்க அவர் சென்றார்.
வேட்பாளரின் வாகனம் கிராமத்தின் எல்லையைத் தொட்டதுமே, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் வேட்பாளரின் வாகனத்தைச் சுற்றி வளைத்து, “ஊருக்குள் வர அனுமதி இல்லை” என்று முழக்கமிட்டதால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.
குடிநீர் பிரச்னை: சரமாரி கேள்விகளால் திணறிய எம்.எல்.ஏ
ஆட்டூர் கிராம மக்கள் முன்வைத்த மிக முக்கியமான குற்றச்சாட்டு, அக்கிராமத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு. இது குறித்து அக்கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்மணி கூறுகையில், "எங்கள் கிராமத்தில் குடிநீருக்காகக் கிலோமீட்டர் கணக்கில் நடக்க வேண்டியுள்ளது. இது குறித்துப் பலமுறை மனு அளித்தும், கோரிக்கை விடுத்தும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒருமுறை கூட சட்டமன்ற உறுப்பினர் எங்கள் பகுதிக்கு வந்து எட்டிப் பார்க்கவில்லை. இப்போது ஓட்டு கேட்டு மட்டும் எந்த தைரியத்தில் இங்கே வருகிறீர்கள்?" என்று ஆவேசமாகப் பேசினார்.
மேலும், கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்றும், மக்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிய பிரதிநிதி, தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் முகம் காட்டுவது ஏமாற்று வேலை என்றும் பொதுமக்கள் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். கூட்டத்தினர் ஆவேசமடைந்ததைக் கண்ட நிவேதா முருகன் மற்றும் அவருடன் வந்த கட்சியினர், பொதுமக்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், "எங்களுக்குச் சமாதானம் வேண்டாம், தீர்வுதான் வேண்டும்" என மக்கள் விடாப்பிடியாக நின்றதால் அங்கே வாக்குவாதம் நீடித்தது.
வாகனத்தைத் திருப்பிச் சென்ற வேட்பாளர்
மக்களின் எதிர்ப்பு கட்டுக்கடங்காமல் போனதாலும், மேற்கொண்டு கிராமத்திற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாலும், வேறு வழியின்றி நிவேதா முருகன் தனது பிரசார வாகனத்தைப் பின்னோக்கித் திருப்பிக் கொண்டு அந்தப் பகுதியிலிருந்து வெளியேறினார். இதற்கிடையில், தி.மு.க உடன்பிறப்புகள் சிலருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது, ஆனால் ஊர் மக்கள் ஒற்றுமையாக நின்றதால் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடரும் எதிர்ப்பு: செம்பனார்கோவிலும் அதே நிலைதான்!
நிவேதா முருகனுக்குப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பனார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு அவர் வாக்கு சேகரிக்கச் சென்றபோதும், இதேபோல் மக்கள் அவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி மற்றும் வடிகால் வசதி முறையாக இல்லை என்ற காரணத்தைச் சொல்லி மக்கள் அங்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசியல் பின்னடைவா?
பூம்புகார் தொகுதியில் தொடர்ந்து நிலவி வரும் இந்த எதிர்ப்பு, தி.மு.க முகாமிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. "வெற்றி வேட்பாளர்" என்று களமிறங்கிய வேட்பாளருக்கு, சொந்த தொகுதிக்குள்ளேயே மக்கள் தடையாக இருப்பது அக்கட்சியின் மேலிடத்தை யோசிக்க வைத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் வேளையில், அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் மக்களின் இந்தக் கோபம் வாக்குப் பெட்டியில் எதிரொலிக்குமா அல்லது வேட்பாளர் மக்களைச் சமாதானப்படுத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























